
கரூர் சம்பவம் - சிறப்பு புலனாய்வு குழு
Karur Stampede Death Case Update in Tamil : கரூரில் கடந்த 27ம் தேதி தவெக தலைவர் விஜய், பங்கேற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 2 வயது குழந்தை, பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில்குமார், கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில், சிறப்பு புலனாய்வு குழு அமைத்து உத்தரவிட்டார்.
உச்சநீதிமன்றத்தில் தவெக முறையீடு
இந்த உத்தரவை எதிர்த்து தவெக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில், “இந்த வழக்கில் மாநில காவல்துறை அதிகாரிகளின் பங்கு குறித்து தவெக சார்பில் ஏற்கனவே கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், காவல்துறை அதிகாரிகளைக் கொண்டே விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பாரபட்சமாக செயல்பட வாய்ப்பு இருக்கிறது. எனவே, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் பாரபட்சமற்ற விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்" என வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தவெக தரப்பு வாதம்
இந்த வழக்கு நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தவெக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சுப்ரமணியம், "உயர் நீதிமன்ற வழக்கு விசாரணையில் தவெக இணைக்கப்படவே இல்லை. எங்களுக்கு உரிய வாய்ப்பளிக்காமல், கூட்டத்தைக் கட்டுப்படுத்த தவறவிட்டதாக உயர் நீதிமன்றம் எங்கள் மீது குற்றம் சாட்டியது. தவெக தலைவர்கள் சம்பவ இடத்தில் இருந்து ஓடிவிட்டதாகவும் உயர் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது.
கூட்டத்தை விட்டு விஜய் ஓடவில்லை
பொது ஒழுங்கை நிலைநாட்டவே எனது கட்சிக்காரர் (விஜய்) அந்த இடத்தைவிட்டு வெளியேற உத்தரவிடப்பட்டார். பாதிக்கப்பட்டோருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் உதவ எங்கள் தலைவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, கூட்டத்தைக் கட்டுப்படுத்த நிலையான செயல்பாட்டு நடைமுறையை வகுக்கக் கோரும் மனுவை அடிப்படையாகக் கொண்டது" என வாதிட்டார்.
சிபிஐ விசாரணை கோரிய சிறுவனின் தந்தை
கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் வாதத்தை முன்வைத்தார். "என்னுடைய மகனைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறை. ஆனால் அந்த இடத்தில் எதுவும் செய்யவில்லை. இந்த சம்பவத்தில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவன் நான். மாநில அதிகாரிகளின் விசாரணையில் உண்மை வெளிவரும் என்ற நம்பிக்கை இல்லை என்பதால் சிபிஐ விசாரணை கோருகிறேன்." என்று கேட்டுக் கொண்டார்
தமிழக அரசு வாதம்
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறுவனின் தந்தை உயர்நீதிமன்றத்தை அணுகவில்லை. உயர் நீதிமன்றம் திறமையான அதிகாரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்துள்ளது. எனவே சி.பி.ஐ விசாரணை தேவை இல்லை அரிய வழக்குகளை மட்டுமே சூழ்நிலைகளுக்கு ஏற்ப பரிந்துரைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன தீர்ப்பு உள்ளது.
அதேநேரம் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் மற்றொரு விசாரணையும் நடைபெற்று வருகிறது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் SIT விசாரணையும் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசு சிறப்பு விசாரணை குழு அதிகாரியை நியமிக்கவில்லை. மாறாக உயர் நீதிமன்றம்தான் நியமித்தது.
'அஸ்ரா கர்க்' என்ற மூத்த அதிகாரிதான் சிறப்பு விசாரணை குழுவினுடைய அதிகாரியாக செயல்பட்டு வருகிறார். இந்த அதிகாரி சி.பி.ஐ போன்ற மத்திய விசாரணை அமைப்புகளில் பணியாற்றியவர் சிறந்த ஒரு அதிகாரியாக இருந்து கொண்டிருக்கின்றார். எனவே இவருடைய விசாரணையே தொடரலாம்’ என்று கேட்டுக் கொண்டார்.
எனவே, உரிய பதில் மனுவை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என்று, தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கரூர் சம்பவ வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு
கரூர் சம்பவத்தில் பரஸ்பரம் குறை சொல்லிக் கொண்டே இருக்க முடியாது. என்ன என்ற உண்மை வெளி வரவேண்டும். அனைத்து மனுக்கள், பிரமாண பத்திரங்களை பார்த்த பின் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும். விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அரசின் வாதத்தையும், மனுதாரர்களின் வாதங்களை ஏற்று வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுகிறது என நீதிபதிகள் தெரிவித்து விசாரணையை தள்ளி வைத்தனர்.
============================