

மு.க. ஸ்டாலின் தோல்வி
தமிழக சட்டமன்ற தேர்தலில், அப்போதைய முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலின், கொளத்தூர் தொகுதியில் தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றார்.
முதல்வர் விஜய் குட்டிக்கதை
ஸ்டாலினின் தோல்வி திமுகவினரை வேதனையில் ஆழ்த்தியது. இந்தநிலையில், சட்டசபையில் குட்டிக்கதை ஒன்றை சொல்லிய முதல்வர் விஜய், “அப்பாவைக் காணோம்" என்று பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது.
அப்பாவை காணோம்
"கடும் வெயிலில் முதியவர் ஒருவர் தனது நெற்றியில் கையை வைத்துக்கொண்டு ஏதோ ஒன்றை தீவிரமாக தேடிக் கொண்டிருந்தார்.
அதைச் சற்றே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஒரு சிறுவன், 'பெரியவரே, அப்படி என்ன தேடுகிறீர்கள்?' என்று கேட்டான்.
அதற்கு அந்த முதியவர், 'எங்கப்பா... உங்க அப்பாவைக் காணோம்?' என்று கேட்டாராம்." என்றார் விஜய்.
திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் தோல்வியடைந்தது குறித்தும் கிண்டல் செய்திருந்தார் விஜய்.
அப்பா சீக்கிரம் வந்து விடுவார்
இந்நிலையில், புதுக்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, "நம்முடைய தலைவரைப் பார்த்துக் கேட்கிறார், 'உங்க அப்பாவைக் காணோம்?' என்று. வருவார், சீக்கிரமே வந்துவிடுவார் உள்ளே. அதுதான் எங்களால் சொல்ல முடியும்.
இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டியா?
எவ்வளவு விரைவாக அவர் வர வேண்டுமோ, சட்டமன்றத்தில் வந்து மீண்டும் பொறுப்பேற்பார், அது உறுதி. நேற்று வரைக்கும் கம்முனு இருந்தான் கட்சிக்காரன்.
எப்போது இப்படிப் பேசினாரோ அதிலிருந்து கிளம்பி உட்கார்ந்துட்டான் எல்லா ஆளுகளும்... தமிழ்நாடு முழுவதும் கட்சிக்காரன் எழுந்து உட்கார்ந்துட்டான்..." என்று கூறினார்.
திருச்சி கிழக்கில் போட்டி?
இதன்மூலம் விரைவில் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற இடைத்தேர்தலில் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடலாம் என்ற யூகங்கள் வலுத்துள்ளன.
திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேண்டும் என திமுக திருச்சி தெற்கு மாவட்ட செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல்
திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை மற்றும் விராலிமலை ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டு இருக்கிறது.
இடைத்தேர்தலின் முக்கியத்துவம்
மினி தேர்தல் போல நடைபெற இருக்கும் 6 தொகுதி இடைத்தேர்தல் ஆளுங்கட்சிக்கு சவால் என்றால், திமுக, அதிமுக வெற்றி பெற்று, தங்கள் செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய அவசியமும் உருவாகி இருக்கிறது.
===========