
L Murugan on Social Justice Hostel : சென்னை கே.கே.நகரில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் மருத்துவ சேவைகளை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தொடங்கி வைத்தார். இதையடுத்து, இஎஸ்ஐ பயனாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை முகாம்களை தொடங்கி வைத்து, மூத்த குடிமக்களுக்கு மருத்துவ உதவி உபகரணங்களை வழங்கினார்.
கேலிக்கூத்தான செயல் :
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ” தமிழக முதல்வர் மிகப்பெரிய கேலிக்கூத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார். எல்லாரையும் முட்டாளாக்க முயற்சிக்கிறார். எஸ்சி, எஸ்டி(SC ST Hstel) மாணவர்களின் விடுதிக்கு ‘சமூக நீதி விடுதி’(Social Justice Hostel) என பெயர் வைத்திருக்கிறார்.
விடுதிகளின் அவல நிலை :
முதல்வர் இதுவரை ஏதாவது ஒரு மாணவர்கள் விடுதியை நேரில் சென்று பார்த்திருக்கிறாரா? நான் எஸ்டி கமிஷன் துணைத் தலைவராக இருந்தபோது, ஒவ்வொரு விடுதியையும் நேரில் சென்று பார்த்திருக்கிறேன். அங்கு விடுதியின் தரம் என்பது மிக மோசமாக இருக்கும். எஸ்சி, எஸ்டி விடுதியில் தங்கியிருந்து மாணவர் ஒருவர் படிக்கிறார் என்றால், அதைவிட ஒரு கொடுமையை அந்த மாணவர் அனுபவித்திருக்க முடியாது.
எனவே விடுதிகளை, பெயரை மட்டும் மாற்றிவிட்டால் போதாது. பாஜக ஆட்சி செய்யும் மத்திய பிரதேசத்தில் உள்ள விடுதியில், எந்தளவு வசதிகளை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறோம் என தமிழக முதல்வர் நேரில் சென்று பார்க்க வேண்டும்.கர்நாடகா, தெலங்கானாவில் விடுதிகள் எந்தளவு சிறப்பாக இருக்கிறது என்பதை பார்க்க வேண்டும்.
அடிப்படை வசதிகள் கிடையாது :
தமிழகத்தில் எந்த ஒரு அடிப்படை வசதியும் கிடையாது. அந்த விடுதியில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் தோல் நோயால் பாதிக்கப்பட்டிருப்பார்கள். கடந்த வாரம் சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் கூட, விடுதி வசதி சரியாக இல்லை என சாலைக்கு வந்து போராடினார்கள். மாணவர்கள் மீது அக்கறை இருந்தால், நிதி ஒதுக்கி விடுதிகளை மேம்படுத்த வேண்டும்.கிராமங்களில் இன்னும் தீண்டாமை இருக்கிறது. இதையெல்லாம் வைத்து கொண்டு சமூக நீதி(Social Justice) பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
காவல்துறைக்கு பாடம் எடுக்க வேண்டும் :
அடிப்படையில் காவல்துறைக்கு நிறைய பாடங்களை சொல்லிக் கொடுக்க வேண்டி உள்ளது. காவல் நிலையத்துக்கு புகார் கொடுக்க ஒருவர் சென்றாலும் சரி அல்லது ஒரு குற்றவாளி சென்றாலும் சரி, அவர்களிடம் காவல்துறையினரின் அணுகுமுறை சரியில்லை. மக்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும், மக்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் இருந்து போலீஸாருக்கு பயிற்சி வழங்க வேண்டும், இவ்வாறு எல். முருகன் கூறினார்.
=====