

Letter to G.K. Vasan: Erode Yuvaraja quits TMC! Plans to join TVK?
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் மாறிவரும் அரசியல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் தற்போதைய சூழலை தலைகீழாக மாற்றியமைத்துள்ளன. திமுக, அதிமுக ஆகிய இருபெரும் திராவிடக் கட்சிகளையும் பின்னுக்குத் தள்ளி, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியைப் பிடித்து புதிய அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவெகவை நோக்கி படையெடுக்கும் திராவிடக் கட்சி நிர்வாகிகள்
இந்த ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து, அதிமுக மற்றும் திமுக உள்ளிட்ட மாற்று கட்சிகளைச் சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் தவெகவை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
NDA கூட்டணியில் இருந்து வெளியேறிய தமாகா
அரசியல் கூட்டணிகளிலும் பல்வேறு மாற்றங்கள் அரங்கேறி வரும் நிலையில், பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. எனினும் உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தமாகாவில் இருந்து வெளியேறிய யுவராஜா
இந்நிலையில் , தமாகாவின் முக்கிய முகமும், மாநில பொதுச் செயலாளருமான ஈரோடு யுவராஜா கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். அவர் விரைவில் தவெகவில் இணையக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஜி.கே.வாசனுக்கு நெகிழ்ச்சிக் கடிதம்
தனது விலகல் குறித்து தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு யுவராஜா அனுப்பியுள்ள கடிதத்தில், கடந்த 25 ஆண்டுகளாகத் தனது உழைப்பையும் நேரத்தையும் அர்ப்பணித்த அரசியலில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "ஒரு சாதாரண தொண்டனாக இருந்த என்னை மக்கள் மத்தியில் 'யுவராஜா' என்று அடையாளப்படுத்திய பெருமை உங்களையே சாரும். எனது பொதுவாழ்வின் அடித்தளமே உங்கள் வழிகாட்டுதல்தான்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
25 ஆண்டுகால அரசியல் பயணம்
இரண்டு முறை தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராகவும், தமாகா மாநில இளைஞரணித் தலைவராகவும், பின்னர் மாநில பொதுச் செயலாளராகவும் பதவி வகித்து கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கால் நூற்றாண்டு கால நினைவுகள் தன் வாழ்வின் பொக்கிஷம்
மேலும், மக்கள் பணியாற்ற தனக்கு மூன்று முறை சட்டமன்ற தேர்தல்களில் போட்டியிட வாய்ப்பளித்த ஜி.கே.வாசனுக்கும், உறுதுணையாக இருந்த தொண்டர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகக் கூறி, கால் நூற்றாண்டு கால நினைவுகள் தன் வாழ்வின் பொக்கிஷம் என்றும் யுவராஜா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் , தான் கட்சியிலிருந்து விலகினாலும் நீங்கள் என் மீது வைத்திருந்த அன்பையும் , நான் உங்ஜ்களிடத்தில் கற்றுக்கொண்ட நேர்மையையும், எளிமையையும் எப்போதும் என்னை விட்டு விலகாமல் என் வாழ்நாள் முழுவதும் போற்றி பாதுகாப்பேன் என்றும் கூறியுள்ளார்.
======