
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார், இந்த சம்பவம் தமிழகம் மட்டுமல்ல, தேசிய அளவில் நீதி கேட்டு ட்ரெண்டிங்காக உருவாகி இருக்கிறது.
இதுபற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், திமுக ஆட்சியில் காவல்துறை தொடர்பாக 24 மரணங்கள் நடைபெற்று இருப்பதாக குற்றம்சாட்டினார்.
என்கவுண்டர்கள், லாக் அப் மரணங்கள், விசாரணையின் போது உயிரிழப்பு என்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்த அவர், காவல்துறையினரும் சட்டத்திற்கு உட்பட்டே நடக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
சட்டத்தை கையில் எடுக்கும் போக்கு ஆபத்தானது என்று எச்சரித்த சண்முகம், திருப்புவனம் சம்பவத்தில் எந்த சமரசத்திற்கும் இடமளிக்கக் கூடாது என திமுக அரசை கேட்டுக் கொண்டார்.
சட்டத்திற்கு அப்பாற்பட்டு கொடூரமாக தாக்குதல் நடத்துவது, என்கவுண்டர் செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
லாக் அப் மரணத்திற்கு காரணமான காவலர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும், காவல்துறை உங்கள் நண்பன் என்று சொல்லிக் கொண்டு இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவது கடும் கண்டனத்திற்கு உரியது என்று, சண்முகம் தெரிவித்தார்.