

தவெக எம்எல்ஏ - மாவட்ட ஆட்சியர்
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவாக இருப்பவர் அருள் விக்னேஷ். பெண் ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ் அனுப்பியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
வழக்கு பதியவில்லை
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடுத்தடுத்து புகார் அளித்தும் விஜய் அரசு உடனடியாக வழக்குப் பதிவு செய்யவில்லை. ஆட்சியர் புகார் கொடுத்தால் தான் நடவடிக்கை என்ற வகையில் அமைச்சர்களின் பேச்சும் அமைந்து இருந்தது.
எம்எல்ஏ மீது எஃப்ஐஆர் பதிவு
இந்த நிலையில், அதிமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன்பேரில் பெண் ஆட்சியரின் எழுத்துப்பூர்வப் புகார் பெறப்பட்டு, அருள் விக்னேஷ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 9 - முதலில் குரல் கொடுத்த கனிமொழி
திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளைத் தனது எக்ஸ் தளப் பதிவு மூலம் பொதுவெளியில் எழுப்பினார்.
“பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதா? ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீது எழுந்துள்ள இந்தக் குற்றச்சாட்டில் தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?” என்று வினவினார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய், இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மாவட்ட எஸ்பியிடம் திமுக புகார்
கனிமொழியின் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும் ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வசந்தம் கார்த்திகேயன் தலைமையில் திமுகவினர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து புகார் மனு அளித்தனர்.
உரிய விசாரணை நடத்த கோரிக்கை
அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளை சிபிஐ அல்லது சிபிசிஐடி விசாரிக்க வேண்டும்; குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெண் ஆட்சியருக்குக் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தினர்.
அருள் விக்னேஷ் விளக்கம்
தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் திட்டவட்டமாக மறுத்தார் அவர் அளித்த பேட்டியில், தாம் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், தன் மீது அரசியல் உள்நோக்கத்துடன் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் கூறினார்.
மாவட்ட ஆட்சியரின் அரசு இல்லத்தில் காவல்துறை பாதுகாப்பும் சிசிடிவி கேமராக்களும் இருக்கும் நிலையில், தன்னால் எப்படி அத்துமீறி உள்ளே நுழைய முடியும் என்று கேள்வி எழுப்பினார்.
முதல்வர் விஜய்க்காகவும் தவெகவுக்காகவும் மக்களுக்குச் சேவை செய்ய வந்திருப்பதாகவும், எந்த விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் ராஜ்மோகன் பதில்
இந்த விவகாரத்தில் பெண் ஆட்சியர் புகார் அளித்தால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. என்றும் பார்க்காமல் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
வழக்கறிஞர் திரிசூலி வழக்கு
அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் ஆர்.திரிசூலி காவல்துறை அதிகாரிகளுக்கு மனு அளித்ததாகப் பின்னர் உயர்நீதிமன்ற வழக்கில் தெரிவிக்கப்பட்டது.
நவம்பர் 12- டிஜிபியிடம் புகார்
மாவட்ட எஸ்பியிடம் புகார் அளித்ததோடு திமுக தனது நடவடிக்கையை நிறுத்திக்கொள்ளவில்லை. நவம்பர் 12ம் தேதி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தமிழக டிஜிபியிடம் விரிவான புகார் மனு அளித்தார்.
நவம்பர் 12- அதிமுக புகார்
அதிமுக சட்டப் பிரிவு சார்பிலும் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபியிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து உரிய விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
அமைச்சர் நிர்மல் குமார் மறுப்பு
இந்த விவகாரத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமார் அளித்த விளக்கம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அப்படியொரு சம்பவமே நடைபெறவில்லை என்று தெரிவித்தார்.
சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களை அடிப்படையாகக் கொண்டு கனிமொழி குற்றச்சாட்டுகளை எழுப்புவதாகவும் விமர்சித்தார்.
அமைச்சர் வன்னி அரசு பேட்டி
கள்ளக்குறிச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் வன்னி அரசு, இந்த விவகாரம் குறித்து முழுமையாகத் தெரிந்துகொண்ட பிறகே கருத்து தெரிவிக்க முடியும் என்றார்.
பெண் ஆட்சியர் நேர்மையாகச் செயல்படும் அதிகாரி என்றும், அரசுப் பணியில் இருக்கும் பெண்களின் பாதுகாப்பு முக்கியம் என்றும் குறிப்பிட்டார்.
தேசிய மகளிர் ஆணையம் தலையீடு
அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகளை தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த விவகாரத்தில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தி, ஏழு நாட்களுக்குள் நடவடிக்கை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக டிஜிபிக்கு அறிவுறுத்தியது.
கனிமொழி மீண்டும் கேள்வி
அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கனிமொழி மீண்டும் வலியுறுத்தினார். நவம்பர் 18-ந் தேதி சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த விவகாரத்தில் முதல்வர் விஜய் பதிலளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கு எதிராகவே இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், பெண்களின் பாதுகாப்பை அரசு எப்படி உறுதிசெய்யப் போகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
முதல்வரிடம் இடதுசாரிகள் முறையீடு
நவம்பர் 23- முதல்வர் விஜய்யிடம் இடதுசாரி எம்.எல்.ஏ.க்கள் முறையீடு
இந்த விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. டி.லதா, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்தபோது பெண் ஆட்சியர் தொடர்பான குற்றச்சாட்டை எழுப்பினார்.
பெண்களின் பாதுகாப்பு குறித்துப் பேசியபோது, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதற்குப் பதிலளித்த முதல்வர் விஜய், விசாரணை நடைபெற்று வருவதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்ததாக லதா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பெண் ஆட்சியரிடமிருந்து காவல்துறைக்கோ தலைமைச் செயலாளருக்கோ எந்தப் புகாரும் வரவில்லை என்று அரசு வழக்கறிஞர் ஆர்.ஜான் சத்யன் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அதிகாரியே புகார் அளிக்காத நிலையில், செய்திகளின் அடிப்படையில் மட்டும் எஃப்ஐஆர் பதிவு செய்ய நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
கலெக்டரிடம் விளக்கம் பெற்றப்பட்டது
பெண் ஆட்சியரிடமும் தலைமைச் செயலாளரிடமும் நேரடியாக விளக்கம் பெற்று மறுநாள் தெரிவிக்குமாறு அரசு தரப்புக்கு அறிவுறுத்தினார்.
மாவட்ட எஸ்பியிடம் கலெக்டர் புகார்
உயர்நீதிமன்றத்தில் இந்த விவகாரம் விசாரணைக்கு வந்த அதே நாளில், கள்ளக்குறிச்சி பெண் ஆட்சியர் மாவட்ட எஸ்பி ஷஹ்னாஸிடம் எழுத்துப்பூர்வமாகப் புகார் அளித்தார்.
அருள் விக்னேஷ் தனக்கு தகாத மெசேஜ்களை அனுப்பியதாகவும், பொது நிகழ்ச்சிகளில் விருப்பமின்றி நெருங்கி வந்ததாகவும் புகாரில் குற்றம்சாட்டப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின.
அருள் விக்னேஷ் மீது வழக்கு
இந்தப் புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
எம்எல்ஏவிடம் போலீசார் விசாரணை
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அருள் விக்னேஷ் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறினார்.
ஐஜி விசாரிக்க நீதிபதி உத்தரவு
ஆளுங்கட்சி எம்.எல்.ஏ. மீதான குற்றச்சாட்டு என்பதால், மாவட்ட எஸ்பியை விட உயர்ந்த பதவியில் உள்ள அதிகாரி விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்று நீதிபதி அறிவுறுத்தினார்.
வடக்கு மண்டல ஐஜி பிரவீன்குமார் அபிநவ் விசாரணையை மேற்பார்வையிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
சைபர் பிரிவுக்கு நீதிபதி உத்தரவு
பெண் ஆட்சியரை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட ஆபாசப் பதிவுகளை ஏன் அகற்றவில்லை என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். பெண் அதிகாரியின் கண்ணியத்தைப் பாதுகாக்க காவல்துறையின் சைபர் பிரிவு தானாகவே நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா என்றும் கேட்டார்.
ஒரு பெண் தலைமைச் செயலாளராக இருந்தாலும், தூய்மைப் பணியாளராக இருந்தாலும் பாலியல் துன்புறுத்தலில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.
நவ. 27க்கு விசாரணை ஒத்திவைப்பு
பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் உள் புகார்கள் குழு அமைக்கப்பட்டுள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
விசாரணை அதிகாரிகள் மற்றும் உள் புகார்கள் குழு தொடர்பான விவரங்களைத் தாக்கல் செய்ய அறிவுறுத்தி, வழக்கை நவம்பர் 27-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.
=============