
ரஜினியின் ’கூலி’ திரைப்படம் :
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான 'கூலி' திரைப்படம், கடந்த 14ம் தேதி உலகெங்கும் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைத்த இந்தப் படம், ரஜினியின் திரை வாழ்க்கையின் 50-வது ஆண்டு நிறைவில் வெளியானதால், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதைப்போலவே, உலகம் முழுவதும் 500 கோடிக்கு மேல் கூலி படம் வசூலித்து இருக்கிறது.
கூலி படத்திற்கு A சான்றிதழ் :
கூலி படத்திற்கு A சான்றிதழ் வழங்கப்பட்டு இருக்கிறது. இதனால், 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் கூலி படத்தை பார்க்க முடியாது. எனவே, அவர்களும் பார்க்கும் வகையில், படத்துக்கு யு/ஏ சான்று வழங்க, சென்சார் போர்டுக்கு உத்தரவிடக் கோரி, சன் டிவி நெட்வொர்க் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு :
இந்த வழக்கு, நீதிபதி தமிழ்ச்செல்வி முன் விசாரணைக்கு வந்தது. சன்டிவி நெட்வொர்க் தரப்பில், ’எந்த தமிழ் படங்களிலும் அதிகப்படியான சண்டைக் காட்சிகள் இல்லாத படங்களை பார்க்க முடியாது. மோசமான வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளன. மதுக் காட்சிகள் மறைக்கப்பட்டுள்ளன. சென்சார் போர்டு தெரிவித்த நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளன” என வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
வழக்கு தள்ளுபடி - நீதிமன்றம் அதிரடி :
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, ” கூலி படத்தில் அதிக அளவில் சண்டைக் காட்சிகள், மது அருந்தும் காட்சிகள், மோசமான வார்த்தைகள் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றை 18 வயதுக்குட்பட்டோர் பார்ப்பதை அனுமதிக்க முடியாது. எனவே, யு/ஏ சான்றிதழ் வழங்குவது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்கிறேன்” என்று உத்தரவு பிறப்பித்தார்.
===========