

The Madras High Court has questioned why the Parandur airport project was abandoned and has directed the Central and State governments to provide a response.
பரந்தூர் விமான நிலையத் திட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 27,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பசுமைவழி விமான நிலையம் அமைக்க முந்தைய திமுக அரசு திட்டமிட்டு, அதற்கான பணிகளை தொடங்கியது.
ரூ.680 கோடி செலவழிப்பு
விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தாலும், சுமார் 1,700 நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. விமான நிலைய திட்டத்திற்கான மட்டும் திமுக ஆட்சியில் 680 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டதாக தெரிகிறது.
பரந்தூருக்கு தவெக எதிர்ப்பு
பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆரம்பம் முதலே தவெக எதிர்த்து தெரிவித்த வருகிறது. இது தொடர்பாக விவசாயிகளை சந்திக்கவும் காஞ்சிபுரம் சென்றிருந்தார் அக்கட்சியின் தலைவர் விஜய்.
பரந்தூர் விமான நிலையம் கைவிடல்
தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில், விவசாய நிலங்கள் மற்றும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் அறிவித்தார்.
திட்டத்தை கைவிட்டதை எதிர்த்து வழக்கு
இந்தநிலையில், சென்னையைச் சேர்ந்த மென் பொறியாளரும், பதிப்பாளருமான கௌதமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகள் வந்துபோகும் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிலவும் இடநெருக்கடியை சமாளிக்க 27 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடிவு எடுக்கப்பட்டது.
அரசுப் பணம் ரூ.680 கோடி செலவீடு
பரந்தூர் விமான நிலையம் அமைக்க 1700 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த 680 கோடி ரூபாய் அரசு பணம் செலவழிக்கப்பட்டு, 48 சதவிகித நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்ற தவெக அரசு, இந்தத் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளது.
தவெக அரசு கைவிட்ட திட்டம்
விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி முதலமைச்சர் விஜய் இத்திட்டத்தை கைவிடுவதாக கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பரிசீலனைக்கு பிறகே பரந்தூர் தேர்வு
புதிய விமான நிலையம் அமைக்க பன்னூர், திருப்போரூர், படாலம் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்து இறுதியில் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டது.
2,325 ஹெக்டேர் பரப்பில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க, 1527 ஹெக்டர் தனியார் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு 2023ம் ஆண்டு அனுமதி வழங்கியது.
798 ஹெக்டேர் அரசு நிலம்
மேலும் 798 ஹெக்டேர் அரசு நிலம் வகை மாற்றம் செய்யப்பட்டதாகவும், எந்தவித தொழில்நுட்ப புள்ளி விவரங்களும் இல்லாமல், நிபுணர் குழுவின் அறிக்கைகள் இல்லாமல், பொருளாதார ஆய்வுகள் ஏதும் நடத்தாமல் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.
எனவே, முதலமைச்சரின் அறிவிப்பை அமல்படுத்த தடை விதிக்க வேண்டும். கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரிமையாளர்களுக்கு வழங்க தடை விதிக்க வேண்டும்” என்றும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் வரிப்பணம் செலவீடு
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, மக்கள் பணம் கோடிக்கணக்கில் செலவிட்ட பிறகு, பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்
4 வாரங்களுக்குள் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்திய விமான நிலைய ஆணையம் ஆகியவை பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
===================