

கரூர் துயரச் சம்பவம்
TVK Case on Road Show : கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், கரூரில் நடைபெற்ற தவெக மக்கள் சந்திப்பு நிழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து சி.பி.ஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
ரோடு ஷோ வழிகாட்டு நெறிமுறைகள்
இதையடுத்து, அரசியல் கட்சியினர் ரோடுஷோ நடத்துவது தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. அதன்படி, ரோடு ஷோ நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது.
எதிர்ப்பு தெரிவித்து தவெக மனு
ஆனால், இதனை ரத்துசெய்ய வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் தாக்கல் செய்த இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.
தவெக சார்பில் வாதம்
பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு 30 நாட்களுக்கு முன்னதாக அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சி பாதுகாப்பு தொடர்பான மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைள் அனைத்தும் கட்சிகள் மீது திணிக்கப்படுவதாக வாதிக்கப்பட்டது.
நீதிபதிகள் கேள்வி?
அப்போது நீதிபதிகள், இந்த விதிகளில் என்ன தவறு இருக்கிறது? கரூர் துயர சம்பவம் காரணமாக உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் தற்போது தொடங்கப்படுகிறது. அவை தேர்தலில் போட்டியிடுவதில்லை.
அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை
அதே சமயம் தேர்தலில் போட்டியிட்டு எம்.பி.எம்.எல்.ஏக்கள் வைத்துள்ள அரசியல் கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது, த.வெ.க இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
தமிழக அரசு வாதம்
அரசு தரப்பில் வாதிடும்போது, தவெக இதுவரை 2 கூட்டங்கள் நடத்தியுள்ளது. இதில் நிபந்தனைகளின்படி 5000-க்கு அதிகமான நபர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்படுவதால், இதை தவிர்க்க வேண்டுமென்றே, 4998 பெர் பங்கேற்பார்கள் என்று தெரிவித்து விண்ணப்பிக்கிறார்கள்.
ஒரே நாளில் ஒரே இடத்தில் பல கட்சிகள் விண்ணப்பிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவது, இல்லை என்றால், முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.
தவெக மட்டும் எதிர்ப்பது ஏன்?
பெரும்பாலான அரசியல் கட்சிகள் இந்த வழிகாட்டு நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட நிலையில், தவெக கட்சி மட்டுமே இதனை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளது. குறிப்பாக கடும் வெயில் காரணமாக ஒருவர் இறந்தபிறகு தான் வேலூரில் கூரைகள் அமைத்ததாக தமிழக அரசு வாதிட்டது.
தமிழக அரசுக்கு நோட்டீஸ்
இரு தரப்பு வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், ஆன்லைனின் விண்ணப்பங்களை பெறுவது குறித்து அரசு ஏன் பரிசீலீக்க கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், த.வெ.க தாக்கல் செய்த இந்த மனு தொடர்பான 3 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
==============