

தீபத்தூணில் தீபம் - நீதிபதி உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகையன்று தீபம் ஏற்றப்பட வேண்டும் என்று ராம ரவிக்குமார் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தீபம் ஏற்ற அனுமதி வழங்கி உத்தரவு பிறப்பித்தார்.
தீபம் ஏற்ற அனுமதி மறுப்பு
ஆனால் கார்த்திகையன்று வழக்கமாக தீபம் ஏற்றும் உச்சி பிள்ளையார் கோயில் அருகே மரபுப்படி தீபம் ஏற்றப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து பாஜக மற்றும் இந்து அமைப்பினர் அப்பகுதியில் திரண்டதால் காவல்துறையினருக்கும் இந்து அமைப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.
தமிழக காவல்துறை தடை
இதைத் தொடர்ந்து ஜி.ஆர். சுவாமிநாதன் சிஐஎஸ்எஃப் வீரர்கள் பாதுகாப்புடன் தீபம் ஏற்ற உத்தரவிட்டார். ஆனால் சிஐஎஸ்எஃப் வீரர்களை மலைப்பகுதிக்கு செல்ல தமிழக காவல்துறை அனுமதி மறுத்தது.
மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உத்தரவை எதிர்த்து கோயில் நிர்வாகம், தர்கா நிர்வாகம், மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீட்டு மனுகள் தாக்கல் செய்யப்பட்டன.
இரு நீதிபதிகள் அமர்வு விசாரணை
இந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த மாதம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் இந்த வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
தீபத்தூணில் தீபம் - நாளை தீர்ப்பு
இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர். நாளை வெளியாக இருக்கும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் எழுந்துள்ளது. முருக பக்தர்களும் ஆவலுடன் காத்துள்ளனர்.
==================