’கோவில் நிதியில்’ திருமண மண்டபம் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவில் நிதி மூலம் திருமண மண்டபங்களை அமைக்கும் தமிழக அரசின் அரசாணைகளை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Madurai High Court issued order quashing the government orders to construct marriage halls using temple funds
Madurai High Court issued order quashing the government orders to construct marriage halls using temple funds
1 min read

பழனி தண்டாயுதபாணி கோவிலின் உப கோவில்களின் நிதியை கொண்டு, திருமண மண்டபங்கள் கட்ட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

கோவில் நிதியில் திருமண மண்டபம் :

இதை எதிர்த்து, எழுமலை ராம ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். ”பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவிலின் உப கோயிலான வாகீஸ்வரர் கோவில், திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் அபிராமி அம்மன் கோவில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு சொந்தமான இடங்களில் ரூ.22 கோடியே 20 லட்சத்தில் திருமண மண்டபங்கள் அமைக்க தமிழக அறநிலையத்துறை 2023ம் ஆண்டு அரசாணை வெளியிட்டது. இப்பணியை அந்தந்த கோயில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது.

சட்டத்திற்கு புறம்பான அரசாணை :

இவை அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கோயில் நிதியை இந்து மத கொள்கைகளை பரப்புதல், அர்ச்சகர், ஓதுவார் பள்ளிகளை நிறுவுதல், இந்து மதம், தத்துவம் அல்லது சாஸ்திரங்கள் ஆய்வு அல்லது கோயில் கட்டடக்கலை பயிற்றுவிக்கும் பல்கலை அல்லது கல்லுாரி நிறுவுதல், ஹிந்து குழந்தைகளுக்கான அனாதை இல்லங்களை நிறுவுதல், பக்தர்களின் நலன் சார்ந்து மருத்துவமனைகள், மருந்தகங்களை அமைக்க மட்டுமே பயன்படுத்த வேண்டும். எனவே, திருமண மண்டபம் அமைக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

நீதிபதிகள் அமர்வு விசாரணை :

நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள் முருகன் அமர்வு இதை விசாரித்த பிறப்பித்த உத்தரவில், “கோவில் நிதி என்பது அரசின் பொது நிதி அல்ல. பக்தர்கள், நன்கொடையாளர்கள் நிதி வழங்குகின்றனர். அதை அன்னதானம், பிரசாதம் வழங்குதல், கோயில் மேம்பாடு உள்ளிட்ட மத நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

திருமண மண்டபங்கள் கட்டக் கூடாது :

திருமணம் என்பது வாழ்க்கை ஒப்பந்தம். இதில் அனைத்து மதங்களும் வெவ்வேறு நடைமுறைகளை பின்பற்றுகின்றன. மதச்சார்பற்ற அரசு கோவில் நிதியிலிருந்து வணிக நோக்கில் திருமண மண்டபம், வணிக கட்டடங்கள் அமைக்கும் என எதிர்பார்க்கவில்லை. வாடகைக்கு விடும் வகையில் கோயில் நிதியில் திருமணம் மண்டபங்கள் அமைப்பது அறநிலையத்துறை சட்டத்திற்கு எதிரானது.

லாச்சாரத்தின் அடையாளம் கோவில்கள் :

மன்னர்களின் ஆட்சியில் கோவில்கள் அமைக்கப்பட்டன. அவை மதிப்பு மிக்கவை. நம் கலாசாரம், கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்கின்றன. அவற்றிற்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அவற்றை மேற்பார்வையிட்டு முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது. மத நடைமுறைகள், பழக்கவழக்கங்களில் தலையிட அரசுக்கு அதிகாரம் இல்லை. கோவில் நிதியை பயன்படுத்துவது குறித்து கோவில் நிர்வாகம் தான் முடிவெடுக்க முடியும்.

அரசாணைகள் ரத்து :

சட்டசபையில் அரசு அறிவிப்பு வெளியிட்டதன் அடிப்படையில் கோவில் நிதியில் திருமண மண்டபங்கள் அமைக்க அரசாணை வெளியிட்டது தவறு. எனவே, அவற்றை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்கிறோம்” இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.

==

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in