

கோவில் மாவட்டத்தில் மட்டுமே அறிவிப்பு
திருசெந்துார் ராம்குமார் ஆதித்தன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ” தமிழக அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில் இடைநிறுத்த சிறப்பு தரிசனம் - பிரேக் தரிசனம் மற்றும் ஏற்கனவே அமலில் உள்ள தரிசன கட்டணத்தை உயர்த்தும் போது பக்தர்களிடம் கருத்து கோர, கோவில் அமைந்துள்ள மாவட்டத்தில் மட்டும் அறிவிப்பு செய்யப்படுகிறது.
பக்தர்கள் செல்லாத இடங்களிலும் கட்டணம்
கோவில் வளாகத்தில் பக்தர்கள் செல்லாத இடங்களில் கட்டண உயர்வு குறித்து அறிவிப்பு இடம் பெறுகிறது. இதனால் புதுவகை தரிசனம் மற்றும் கட்டண உயர்வு குறித்து பக்தர்களுக்கு தெரிவதில்லை. கோவில் நிர்வாகம், 'ஆட்சேபனை எதுவும் வரவில்லை' என அறநிலையத்துறை கமிஷனருக்கு பரிந்துரைத்து, கட்டண உயர்வு மற்றும் புது நடைமுறைக்கு அனுமதி பெறுகிறது.
மாற்றம் வந்த பிறகே பக்தர்களுக்கு தெரிகிறது
கட்டணம் மற்றும் தரிசன முறையில் மாற்றம் நடைமுறைக்கு வரும்போது தான் பக்தர்களுக்கு விபரம் தெரிகிறது. அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களுக்கு, வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து பக்தர்கள் அதிக அளவில் வருகின்றனர்.
கோவில்களில் பிரேக் தரிசனம்
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளிட்ட சில முக்கிய கோயில்களில் ஒரு மணிநேரம் இடைநிறுத்த தரிசனம் அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அனைத்து பக்தர்களுக்கும் தெரிய வேண்டும்
எனவே, கருத்து கேட்பு அறிவிப்பு செய்யும்போது அனைத்து பக்தர்களுக்கும் சென்றடையும் வகையில் அறநிலையத்துறை வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும். கருத்து கேட்பு அறிவிப்பை அறநிலையத்துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாவட்ட நிர்வாகத்தின் இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
30 நாட்கள் அவகாசம் தேவை
மாநிலம் முழுதும் நாளிதழ்களில் அறிவிப்பு செய்ய வேண்டும். கருத்து தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் அளிக்க வேண்டும். சிறப்பு தரிசனம், பூஜைகள், இடைநிறுத்த சிறப்பு தரிசனத்திற்கு கட்டண நிர்ணயம் மற்றும் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து அறநிலையத்துறை அறிவிப்பு செய்ய இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்” என்று அவர் கோரிக்கை விடுத்தார்.
அறநிலையத்துறைக்கு நோட்டீஸ்
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு இந்த வழக்கை விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் சங்கர் ஆஜரானார். நீதிபதிகள் தமிழக அறநிலையத்துறை கூடுதல் தலைமை செயலர், கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை ஜனவரி 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
==================