

34 வது டிஜிபியாக பதவியேற்றார் மகேஷ்குமார் அகர்வால்
தமிழகக் காவல் துறையின் 34-ஆவது தலைமை இயக்குநராக (டிஜிபி) மூத்த ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால் இன்று அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.
தமிழகத்தின் புதிய டிஜிபி
தேர்தல் பணிகளின் போது தமிழகத்தின் டிஜிபியாக பணியாற்றி வந்த சங்கர் ஜிவால் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதியில் பணி நிறைவு பெற்று ஓய்வு பெற்றார்.
அதன் பின்னர், புதிய நிரந்தர டிஜிபியை நியமிப்பதில் தமிழக அரசுக்கும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கும் (UPSC) இடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதில் நீண்ட இழுபறி நீடித்து வந்தது.
தற்காலிக நியமனங்களும் தேர்தல் ஆணைய உத்தரவும்
முன்னாள் டிஜிபி சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, இடைக்கால ஏற்பாடாக காவல் துறைப் பொறுப்பு டிஜிபியாக ஜி. வெங்கடராமன் நியமிக்கப்பட்டுப் பணிகளை கவனித்து வந்தார்.
தற்காலிக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர்
இதற்கிடையே, தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிகளின்படி இந்தியத் தேர்தல் ஆணையம் தலையிட்டது. அதன்படி, கடந்த ஏப்ரல் 2-ஆம் தேதி தமிழகத்தின் தற்காலிக டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமிக்கப்பட்டார்.
யுபிஎஸ்சி கூட்டம் மற்றும் இறுதிப் பரிந்துரை
தேர்தல் நடைமுறைகளுக்கு இடையே, தமிழகத்திற்கான நிரந்தர காவல்துறை தலைவரை தேர்வு செய்வதற்கான உயர்மட்ட குழுக் கூட்டம் கடந்த 26-ஆம் தேதி புது டெல்லியில் உள்ள யுபிஎஸ்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
3 பேர் கொண்ட பட்டியல்: தமிழக அரசுக்கு பரிந்துரை
இக்கூட்டத்தில், பணிமூப்பு அடிப்படையில் தகுதிவாய்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளான ராஜீவ்குமார், சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் மகேஷ்குமார் அகர்வால் ஆகியோரின் பெயர்கள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு, இறுதி ஒப்புதலுக்காக தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
மாநில அரசு அரசாணை
மத்திய தேர்வாணையம் அனுப்பிய அந்த பரிந்துரைப் பட்டியலின் அடிப்படையில், மகேஷ்குமார் அகர்வாலை தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமித்து மாநில அரசு அரசாணை வெளியிட்டது.
இந்த உத்தரவின்படி, அவர் இன்று முறைப்படி தமிழக காவல் துறையின் தலைவராகப் பொறுப்பேற்றார்.
தமிழக டிஜிபியாக பொறுப்பேற்றபின் அவர் பேசும்போது, பென்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம்.
தமிழக காவல்துறையின் இந்த நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை கேட்டுக்கொள்கிறோம் என்றும் தெரிவித்தார்.
=====