தொகுதிக்கு 5 கோடி செலவு : ”முடியாது, கைவிரித்த நிர்வாகிகள்” : யோசிக்கும் விஜய், கூட்டணிக்கு பரிசீலனை!

தொகுதிக்கு 5 கோடி செலவு செய்ய நிலையில் தாங்கள் இல்லை தேர்தலில் போட்டியிட விரும்பியவர்கள் தெரிவித்ததே, என்டிஏ கூட்டணி பற்றி விஜய் ஆலோசிக்க முக்கிய காரணம் எனத் தெரிய வந்துள்ளது.
Main reason Vijay is considering NDA alliance is, those who wanted to contest elections, said they have no money
Main reason Vijay is considering NDA alliance is, those who wanted to contest elections, said they have no money google
2 min read

தமிழக வெற்றிக் கழகம்

தமிழக வெற்றிக் கழகத்தை விஜய் தொடங்கி இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட போதும், இப்போது தான் முதன்முறையாக தேர்தலை சந்திக்கிறது. வரும் சட்டமன்ற தேர்தலை தவெக தனித்து சந்திக்க இருக்கிறது.

திமுக, பாஜக விமர்சனம்

மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் திமுகவையும், பாஜகவையும் ஒரே தராசில் வைத்து கடுமையாக விமர்சித்து வந்தார் விஜய். இதனால், அவர் தனித்து போட்டியிடுவார் என்பது தெளிவாகி விட்டது.

நேர்காணல் நடத்திய விஜய்

தேர்தலில் போட்டியிட 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. தவெக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களை நேரில் அழைத்து விஜய் பேசினார். தொகுதி நிலவரம், வெற்றி வாய்ப்பு, தேர்தல் பிரசாரம் பற்றி அவர் கேட்டு அறிந்ததாக கூறப்படுகிறது.

நிதிநிலைமை விளக்கிய நிர்வாகிகள்

அப்போது எதிர்பாராத விதமாக, பல மாவட்ட நிர்வாகிகள் ஒரு கசப்பான உண்மையை முன்வைத்தனர். அதாவது, தேர்தலில் போட்டியிடத் தகுதியான, போதுமான பணபலம் கொண்ட வேட்பாளர்கள் கட்சியில் இல்லை என்பதுதான் அது.

தேர்தல் செலவுக்கு பணமில்லை

தொகுதிக்கு 5 கோடி கூட செலவழிக்க முடியாத நிலையில் தான் மாவட்ட செயலாளர்களும், போட்டியிட விருப்பம் தெரிவிப்பவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை விஜய் தெரிந்து கொண்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் நெருங்கும் வேளையில், தவெக மிகப்பெரிய நடைமுறைச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது. அதுதான் 'நிதி நெருக்கடி'.

மூத்த நிர்வாகிகள் அதிர்ச்சி

130 மாவட்ட நிர்வாகிகளில் பெரும்பாலானோர் இந்த கசப்பான உண்மையை அம்பலப்படுத்த, புஸ்ஸ் ஆனந்த் உள்ள மூத்த கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். பண பலம் இல்லாத வேட்பாளர்களை கொண்டு தேர்தலை சந்திப்பது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்று விஜய்க்கு விளக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

தொகுதிக்கு ரூ. 5 கோடி தேவை

தேர்தல் ஆணையம் ஒரு வேட்பாளருக்கான செலவு வரம்பை 40 லட்சம் ரூபாயாக நிர்ணயித்திருந்தாலும், கள நிலவரப்படி ஒரு தொகுதியில் வலுவாக போட்டியிடக் குறைந்தது 5 கோடி ரூபாய் தேவைப்படும் என நிர்வாகிகள் கணித்துள்ளனர்.

கூட்டணி தவறில்லை - நிர்வாகிகள் யோசனை

நிதி இல்லாமல் தேர்தலில் போட்டியிடுவது தற்கொலை சமம், நாம் ஏன் ஒரு பெரிய கூட்டணியுடன் கைகோர்க்க கூடாது என்ற யோசனையை பெரும்பாலான மாவட்ட நிர்வாகிகள் முன்வைத்து இருக்கிறார்களாம். இது தொண்டர்கள் இடையேயும் விவாதப் பொருளாகி உள்ளது.

தீவிர யோசனையில் விஜய்

எனவே, என்டிஏ கூட்டணிக்கு செல்லலாமா என்ற பரிசீலனையில் விஜய் இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதேசமயம், இதுவரை பாஜகவை எதிர்த்து விட்டு, தற்போது, கூட்டணிக்கு சென்றால் ’பி டீம்” என்ற விமர்சனம் உண்மையாகி விடும்.

மவுனம் காக்கும் எடப்பாடி

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டி இருக்கும். அப்போது தவெகவிற்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்ற கேள்வி மக்களிடம் எழ வாய்ப்புள்ளது. விஜய் கேட்கும் அதிகாரப் பகிர்வு, துணை முதல்வர் பதவிக்கு அதிமுக எந்த அளவு சம்மதிக்கும் என்றும் தெரியவில்லை.

நெருக்கடியை உணர்ந்த தவெக

அரசியல் கட்சியை உருவாக்குவது எளிது, ஆனால் அதைத் நிதி ரீதியாக, மற்ற கட்சிகளை எதிர்த்து தொடர்ந்து நடத்துவது எந்த அளவு கடினம் என்பதை தவெக நிர்வாகிகள் உணர்ந்து இருக்கின்றனர்.

இரண்டு புறமும் இடி

ஒரே சமயம் மத்திய, மாநில அரசுகளை எதிர்ப்பது என்பது, மத்தளத்திற்கு இருபுறமும் இடி என்பது போலத்தான் இருக்கும்.

தவெக நிர்வாகிகளிடம் குழப்பம்

தவெக மூத்த நிர்வாகிகளிடமும் தேர்தலை எதிர்கொள்வதற்கு, ஒருமித்த கருத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. சிலர் கூட்டணி சரி என்கிறார்கள், சிலர் வேண்டாம் என்கிறார். எல்லாவற்றுக்கும் மேலாக விஜயிடமும் அரசியல் தொடர்பாக தெளிவான பார்வை இல்லை என்ற விமர்சனமும் முன் வைக்கப்படுகிறது.

விஜய் கையில் முடிவு?

எனவே, கூட்டணியா’ தனித்து போட்டியா? என்ற குழப்பத்தில் விஜய் எடுக்கப் போகும் முடிவே, தவெகவின் எதிர்காலத்தையும், விஜயின் அரசியல் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும்.

================================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in