

மக்கள் நீதி மய்யம்
திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் 15 தொகுதிகளை போட்டியிட விருப்பம் தெரிவித்தது. தேர்தலில் போட்டியிட விரும்பும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் கட்சி சார்பில் விருப்ப மனு கட்டணம் பெறப்படுவது வழக்கம்.
விருப்ப கட்டணம் ரூ.50,000
அந்த வகையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் விருப்ப மனு கட்டணம் ரூ.50 ஆயிரம் என நிர்ணயிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று கருதி மநீம தொண்டர்கள், நிர்வாகிகள் 60 பேர் விருப்ப மனு கட்டணம் செலுத்தி, மனுக்களை பெற்றுச் சென்றனர்.
2 தொகுதிகள் மட்டுமே - திமுக கறார்
இதனிடையே, திமுக குழுவினருடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் 2 இடங்கள் மட்டுமே மநீம-க்கு தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. அந்த தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
தேர்தலை புறக்கணித்த மக்கள் நீதி மய்யம்
இதுபற்றி கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் ஆலோசனை நடத்த, கட்சியின் டார்ச் லைட் சின்னத்தில் தான் போட்டியிட வேண்டும் என்று அவர்கள் உறுதியாக நின்றனர். இதனால், வேறுவழியின்றி, முதல்வர் ஸ்டாலினை சந்தித்த கமல்ஹாசன், தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிட போவதில்லை என்று அறிவித்தார்.
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யப் போவதாக தெரிவித்த கமல்ஹாசன், சொந்த சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு இல்லாததால், தேர்தலில் களமிறங்கவில்லை என்பதையும் பகிரங்கமாக ஒப்புக் கொண்டார்.
மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் அதிர்ச்சி
தேர்தலில் போட்டியிடலாம் என்று ஆசையுடன் விருப்ப மனு கட்டணம் செலுத்திய கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சூழலில், மநீம தேர்தலில் போட்டியிடாததால் விருப்ப மனு கட்டணத்தை திருப்பித்தர வேண்டும் என்று கட்டணத்தை செலுத்திய நிர்வாகிகள் கோரிக்கை வைத்துள்ளதாக செய்திகள் வெளியாயின.
50 ஆயிரத்தை தர முடியாது
இதுதொடர்பாக மநீம நிர்வாகிகள் கூறுகையில், “விருப்ப மனு கட்டணம் என்பது திருப்பித் தரக்கூடிய கட்டணம் அல்ல (Non--refundable) என்பதும் அந்த கட்டணம் கட்சி நிதியாக கருதப்படும் என்பதும் அனைவருக்கும் நன்கு தெரியும்.
நிர்வாகிகள் பணம் கேட்கவில்லை
அந்த வகையில், தேர்தலில் கட்சி சார்பில் போட்டியிட 60 பேர் விருப்ப மனு கட்டணம் செலுத்தியிருந்தனர். அந்த கட்டணம் கட்சி நிதிக்கு சென்றுவிட்டது.
விருப்ப மனு கட்டணம் செலுத்திய எந்த தொண்டரும், நிர்வாகியும் அதை திரும்ப தருமாறு கட்சி தலைமையிடம் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை.
ஆனால், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் திட்டமிட்டு இதுதொடர்பாக தவறான தகவல்களை பரப்புகிறார்கள்” என்று விளக்கம் அளித்தனர்.
======