

தமிழக காங்கிரஸ் கமிட்டி
சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக, செல்வப்பெருந்தகை விருப்பம் தெரிவித்து இருந்தார்.
தேர்தலுக்கு பிறகு கூட்டணி கணக்குகள் மாற, தவெகவிற்கு ஆதரவுக்கரம் நீட்டிய காங்கிரஸ், 59 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக ஆட்சி, அதிகாரத்தில் இடம் பெற்று இருக்கிறது.
காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர்
இந்தநிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகை ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து,
புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் எம்பியை கட்சி தலைமை அறிவித்தது.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் புதிய தலைவர் மாணிக்கம் தாகூரிடம், முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பொறுப்புகளை ஒப்படைத்தார். தொடர்ந்து மாணிக்கம் தாகூர் முறைப்படி தலைவராக பொறுப்பேற்று கொண்டார்.
காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு
விழாவில் அமைச்சர்கள் ராஜேஷ்குமார், விஸ்வநாதன், அகில இந்திய காங்கிரஸ் பொறுப்பாளர் கிரிஸ் சோடங்கர், டாக்டர் செல்லக்குமார், முன்னாள் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி...
திருநாவுக்கரசர், கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், எம்பிக்கள் பிரவின் சக்கரவர்த்தி, விஷ்ணு பிரசாத், சசிகாந்த் செந்தில், சுதா, கிறிஸ்டோபர் திலக், எம்எல்ஏ தாரகை கத்பட் கலந்து கொண்டனர்.
கட்சி நலனே முக்கியம்
விழாவில் பேசிய மாணிக்கம் தாகூர், “ காங்கிரஸ் கட்சியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போக வேண்டும் என்றால் நம்முடைய ஈகோவை விட்டு நாம் அனைவரும் சேர்ந்து வேலை பார்க்க வேண்டும். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் முக்கியம் என்பதை யோசிக்க வேண்டும்.
அடித்தால் திருப்பி அடிப்பேன்
என்னை பொறுத்தவரைக்கும், வாய்க்கால் சண்டையா, வரப்பு சண்டையா?. என்ன? காங்கிரசை யார் அடித்தாலும் திருப்பி அடிப்பேன். எங்களை தொட்டால் விடமாட்டோம்.
ராகுலால் மட்டுமே எழுச்சி
ராகுல்காந்தி தான் எங்கள் முகம். அவர் தான் எங்கள் எதிர்காலம். ராகுல் காந்தியால் மட்டும் தான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் எழுச்சி பெறும். இதில் எந்த சந்தேகமும் கிடையாது.
ராகுலை பிரதமராக்குவோம்
நான் எல்லாம் ஒரு கருவி தான். ராகுல் காந்தி பிரதமராக இருக்க வேண்டும் என்பதுதான் லட்சியமாக இருக்க வேண்டுமே தவிர வேற ஒன்றும் நமக்கு தேவை இல்லை. தவெக கூட்டணியில் நாம் இருக்கிறோம். நம்முடைய அமைச்சர்கள் பங்கும் இருக்கிறது.
நாம் இந்த கூட்டணி ஆட்சியில் இருக்கும் போதே காங்கிரஸ் கட்சியின் பலத்தை கூட்ட வேண்டும். எப்படி கூட்ட முடியும். தமிழகத்தில் ராகுல்காந்திக்கு எந்த சர்வே எடுத்தாலும் சரி.
ராகுலுக்கு 65% ஆதரவு
ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று 60லிருந்து 65 சதவீதம் பேர் சொல்கிறார்கள். எதிர்பார்ட்டியில் மோடி. அது 35 மார்க்கே தட்டாது. ராகுல் காந்திக்கு ஆதரவு கொடுப்பவர்கள் ஏன் காங்கிரசுக்கு ஓட்டு போட மாட்டார்கள் என்பது தான் கேள்வி.
விஜய்க்கு 35% வாக்குகள்
விஜய்க்கு 32 முதல் 35 சதவீதம் வரை வாக்குகள் உள்ளது. ராகுலுக்கு 65 சதவீதம் ஆதரவு இருக்கிறது. வாக்கு சதவீதத்தை அதிகரிப்பது தான் நமது லட்சியமாக இருக்க வேண்டும்.
தவெகவை போல வெற்றி அவசியம்
விஜயை நம்பி தவெக எப்படி மிகப்பெரிய வெற்றி பெற்றதோ?. அதேபோல் ராகுல்காந்தியை நம்பி தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற முடியும். எல்லாரும் ராகுல் காந்தியை தான் முன்னிறுத்த வேண்டும்.
பணம் கொடுத்து வெற்றிபெற முடியாது
தமிழநாட்டில் இனிமேல் பணம் கொடுத்து வெற்றி பெற முடியாது. பணத்துக்கு வேலை இல்லை.
உழைக்கக் கூடிய காங்கிரஸ்காரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய ஒரு அரசியலை மாற்றி இருக்கிறது. இதை நாம் மறந்து விடக்கூடாது” என்று மாணிக்கம் தாகூர் பேசினார்.
===============