மரகதம் குமரவேல், சத்யபாமா எம்எல்ஏக்களாக பதவியேற்பு : அதிமுக, திமுக மீது காட்டமான விமர்சனம் : TVK பலம் 109 ஆனது..!

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தவெகவின் மரகதம் குமரவேல், சத்தியபாமா இருவரும் பதவியேற்றுக் கொண்டனர்.
Maragatham Kumaravel and Sathyabhama of TVK, won the by-elections assumed office.
Maragatham Kumaravel and Sathyabhama of TVK, won the by-elections assumed office.source:thamizhalai,ai generated
2 min read

இடைத் தேர்தலிலும் தவெக வெற்றி

2026 பொதுத் தேர்தலில் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி ஆட்சியைப் பிடித்தது முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக. மதுராந்தகம் தொகுதியில் வென்ற அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல், தாராபுரம் அதிமுக எம்எல்ஏ சத்தியபாமா ஆகியோர் இணைந்த நிலையில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.

5 முனைப்போட்டி

அதில் அவர்களே மீண்டும் தவெக சார்பில் களமிறங்கினர். இம்முறை திமுகவும் அதிமுகவும் களத்தில் மிகவும் தீவிரம் காட்டின.

தவெகவில் 107 எம்.எல்.ஏக்கள் மட்டுமே உள்ள நிலையில், கூடுதலாக 2 இடங்கள் கிடைத்தால் பெரும்பான்மை பலத்தை நெருங்க முடியும் என்பதாலும் தவெக அரசின் 4 மாத கால ஆட்சிக்கான மதிப்பீடாகப் பார்க்கப்பட்டதாலும் அக்கட்சியும் தீவிரம் காட்டியது.

முதல்வர் விஜய் தீவிர பிரச்சாரம்

முதலமைச்சர் விஜயும் கிராமம் கிராமாக ரோடு ஷோ, பரப்புரை என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதையடுத்து மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு 6ம் தேதி நடைபெற்று, வாக்கு எண்ணிக்கை 9ம் தேதி நடைபெற்றது.

சத்யபாமா அபார வெற்றி

தவெக வேட்பாளர் சத்யபாமா 66 ஆயிரத்து 841 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சுகன்யாவை விட 9 ஆயிரத்து 471 வாக்குகள் முன்னிலை பெற்றார். அதிமுக வேட்பாளர் பானுமதி 45 ஆயிரத்து 280 வாக்குகளுடன் மூன்றாவது இடம் பிடித்தார்.

மரகதம் குமரவேல் அசத்தல் வெற்றி

அதேபோல மதுராந்தகம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரகதம் குமரவேல் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி, 20 ஆயிரத்து 40 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். திமுகவின் பரந்தாமன் 2-ம் இடமும் அதிமுகவின் கணிதா சம்பத் 3-வது இடமும் பிடித்தனர்.

எம்எல்ஏக்களாக பதவியேற்பு

இந்நிலையில் வெற்றிபெற்ற தாராபுரம் வேட்பாளர் சத்யபாமாவும் மதுராந்தகம் வேட்பாளர் மரகதம் குமரவேலும் இன்று காலை சபாநாயகர் அறையில் பதவியேற்றுக்கொண்டனர்.

அவர்களுக்கு சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்களாக பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இதையடுத்து முதல்வர் விஜயை சந்தித்து வாழ்த்து பெறுகின்றனர்.

தவெக பலம் 109 ஆக உயர்வு

தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம், தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது.

வாக்களித்த மக்களுக்கு நன்றி

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தவெக எம்.எல்.ஏ மரகதம் குமரவேல் பேசுகையில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி பொதுமக்கள் எனக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்துள்ளனர் அவர்களுக்கு கோடான கோடி நன்றி.

அதிமுக, திமுக மீது பாய்ச்சல்

இந்த இடைத்தேர்தலில் எவ்வளவோ பொய் பிரச்சாரங்களை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் செய்துள்ளனர். அதேபோல் நாங்கள் பதவியை ராஜினாமா செய்த நான்கு மாத காலத்தில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்பினர்.

தனிப்பட்ட தாக்குதல்

குறிப்பாக தனிமனித தாக்குதலை நடத்தினர். இந்த இடைத்தேர்தலில் எதிர்க்கட்சிகள் என் மீது எவ்வளவு விமர்சனம் செய்தும் மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி மக்கள், என் மீதும் முதலமைச்சர் விஜய் மீதும் நம்பிக்கை வைத்து என்னை வெற்றி பெற செய்துள்ளனர்.

இடைத்தேர்தலுக்காக 20 நாட்கள் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஒரு பெண் என்று பாராமல் எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு இழிவு படுத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்கள்.

எங்களுக்கும் ஒரு குடும்பம் உள்ளது என்பதை அவர்கள் நினைக்கவில்லை. புரட்சி தலைவி அம்மா இருந்திருந்தால் எங்களுக்கு இது போன்ற நிலைமை ஏற்பட்டிருக்காது

முதல்வர் விஜய்யால் கிடைத்த வெற்றி

அந்த அளவிற்கு திமுகவும் அதிமுகவும் சேர்ந்து எங்களை மன உளைச்சலுக்கு ஆளாக்கினார்கள். ஆனால் தமிழக வெற்றிக்கழக தலைவரும் முதலமைச்சருமான விஜய் இரண்டு நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தை மேற்கொண்டு ஆதரவாக களம் இறங்கினர் அவரின் முகத்திற்காகவே நாங்கள் இங்கு பெற்றுள்ளோம்” என்று கூறினார்.

=====

logo
Thamizh Alai
www.thamizhalai.in