

திமுகவில் தொகுதி பங்கீடு
DMK Alliance Seat Sharing : திமுக கூட்டணியில் நீண்ட இழுபறிக்கு பிறகு காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் கொடுத்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
திமுக - மார்க்சிஸ்ட்
மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை இறுதி செய்யும் பணிகளில் திமுக மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இன்று பேச்சுவார்த்தை நடந்தது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம், "திராவிட முன்னேற்ற கழகத்தின் பேச்சுவார்த்தை குழுவுடன் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளோம். அவர்கள் ஒரு தொகுதி எண்ணிக்கையை சொல்லியுள்ளார்கள்.
தொகுதி ஒதுக்கீட்டில் உடன்பாடில்லை
அதில் எங்களுக்கு ஏற்பு கிடையாது. கூடுதலான தொகுதிகள் வேண்டுமென நாங்கள் வற்புறுத்தி இருக்கிறோம். தலைமையுடன் பேசிவிட்டு, மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என குழு தெரிவித்துள்ளது. எனவே மீண்டும் நாளை பேச்சுவார்த்தை துவங்கும் எனத் தெரிவித்தார்.
எதிர்பார்த்த தொகுதிகள் கிடைக்காது
திமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைந்துள்ளன. அதை காரணம் காட்டி பேச்சுவார்த்தை குழுவினர் நியாயமான விஷயங்களை தெரிவித்தார்.
அது ஏற்கத்தக்க ஒன்றாக உள்ளது. அதனால் நாங்கள் எதிர்பார்த்த கூடுதலான தொகுதிகள் ( இரட்டை இலக்க தொகுதிகள் ) கிடைப்பதற்கான வாய்ப்புகள் இல்லை.
முதலில் எண்ணிக்கை, பிறகு தொகுதி
எனவே கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளை விட அதிக இடங்களை கேட்டு வற்புறுத்தி இருக்கிறோம். நாளை தொடர்ந்து பேசுவோம் என தெரிவித்துள்ளார். எண்ணிக்கை முடிவு செய்த பிறகு தான், தொகுதிகள் குறித்து விவாதிப்போம். இப்போதைக்கு எங்களோட கோரிக்கைகளை முன்வைத்துள்ளோம்.
நாளை மீண்டும் பேச்சுவார்த்தை
அவர்களுடைய சிரமங்களை சொல்லி இருக்கிறார்கள். நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவோம்” என்று சண்முகம் தெரிவித்துள்ளார்.
கடந்த முறை சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆறு இடங்கள் ஒதுக்கப்பட்டு இருந்தது.
புதிய கட்சிகள் வரவால் பங்கீட்டில் இழுபறி
இந்தத் தடவை தேர்தலில் கூடுதல் இடங்களை கேட்டு வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த முறை திமுக கூட்டணியில் தேமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் இடம் பிடித்து இருப்பதால், தொகுதி பங்கீட்டில் சிக்கல் எழுந்துள்ளது. குறைந்தது 170 தொகுதிகளில் போட்டியிட வேண்டிய கட்டாயம் திமுகவுக்கு உள்ளது.
=====