

திருச்செந்தூர் முருகன் கோவில்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இந்த கோயிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
தைப்பூசம், வைகாசி விசாகம், கந்தசஷ்டி உள்ளிட்ட முக்கிய தினங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், திருச்செந்தூர் கோவிலின் சேவை கட்டணம் உயர்த்தப்படும் என்ற தகவல் வெளியாகி வருகிறது.
சேவைக் கட்டணம் உயர்வா?
அபிஷேகம், தரிசன கட்டணம் போன்றவை உயர்த்தப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பக்தர்களுக்கான மூலவர் அபிஷேக கட்டணம் ரூ.1500ல் இருந்து ரூ.10,000 ஆகவும், தங்கத்தேர் இழுப்பதற்கு ரூ.2500ல் இருந்து ரூ.5,000 ஆகவும், சண்முகர் அர்ச்சனை செய்ய ரூ.30,000 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படும் என்று தகவல் வெளியானது.
9 கால பூஜை ரூ.1500ல் இருந்து ரூ.6,500 ஆக உயர்த்திடவும் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கட்டணங்கள் குறித்து பொதுமக்கள் ஜூலை 7ஆம் தேதிக்குள் கருத்து தெரிவிக்கலாம் என கூறியிருந்தது.
அமைச்சர் ரமேஷ் விளக்கம்
இதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. இந்த நிலையில்,, அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் விளக்கம் அளித்துள்ளார். "திருச்செந்தூர் கோயில் சேவை கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை.
பழைய கட்டணங்களே வசூல்
திருச்செந்தூர் கோயிலில் 20க்கும் மேற்பட்ட சேவைகள் உள்ளன. அதே கட்டணம் தான் தற்போது நீடிக்கிறது. நிர்வாக ரீதியாக திருச்செந்தூர் கோயிலில் சில முறைகேடு இருந்தது தெரியவந்தது.
இதனால், கட்டண உயர்வை அதிகாரிகள் ஏற்கனவே பரிசீலித்து வைத்திருந்தனர். திருச்செந்தூர் கோயிலில் கட்டண உயர்வு குறித்து மக்களிடம் கருத்து மட்டுமே கேட்கப்பட்டது.
மக்கள் கருத்தை ஏற்போம்
கோயில் கட்டண சேவைகளில் விலை உயர்த்தப்பட்டதாக தவறான தகவல்கள் பரபரப்பப்பட்டு வருகிறது. பொது மக்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளது. மக்கள் தெரிவிக்கும் முடிவைத் தாண்டி தவெக அரசு எந்த முடிவையும் எடுக்காது" என அமைச்சர் ரமேஸ் தெரிவித்தார்.
செல்போன் பயன்படுத்த தடை
ஜூலை 1 முதல் திருச்செந்தூர் கோயிலில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் கைபேசிகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு, அது தீவிரமாக நடைமுறைப்படுத்தப்படும்.
திருக்கோயிலுக்குள் பக்தர்கள் முழுமையாக பரிசோதனை செய்யப்பட்ட பிறகே கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
=====