

சட்டமன்ற சர்ச்சை மற்றும் ஸ்டாலின் வீடியோ
அண்மையில் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடரில் முதலமைச்சர் விஜய் பேசிய சில கருத்துகள் மற்றும் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மிசா சிறை வாழ்க்கை குறித்த விமர்சனங்கள் பெரிய அளவில் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டு விளக்கமளித்துள்ளார்.
"யார் என்ன கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது, அது காலத்துக்கும் அப்படியேதான் இருக்கும்" என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
மிசா சிறைக் கொடுமைகளும் வரலாறும்
தனது வீடியோ பதிவில் மிசா கால நிகழ்வுகளை நினைவுகூர்ந்த மு.க.ஸ்டாலின், "எமர்ஜென்சி காலத்தில் மறைந்த தலைவர் கருணாநிதி எமர்ஜென்சியைக் கடுமையாக விமர்சித்துப் பேசியதைத் தொடர்ந்து திமுக ஆட்சி கலைக்கப்பட்டது. மறுநாளே காவல் துறையினர் என்னை மிசா சட்டத்தில் கைது செய்தனர்.
தொழுநோயாளிகள் அடைக்கப்படும் சிறிய அறையில் 10 பேருடன் அடைக்கப்பட்டோம். இரவில் தூங்க விடாமல் லத்தியாலும் பூட்ஸ் கால்களாலும் அடித்தனர். அந்தத் தாக்குதலில்தான் நாடாளுமன்ற உறுப்பினர் சிட்டி பாபு சிறையிலேயே உயிரிழந்தார்.
எனது தாடை எலும்பும் உடைந்தது, அதற்கான தழும்புகள் இன்றைக்கும் என்னிடம் உள்ளன. சந்தேகம் இருந்தால் சட்டமன்ற நூலகத்தில் உள்ள ஆவணங்களைப் படித்துப் பாருங்கள்" எனக் காட்டமாகக் கூறியுள்ளார்.
சர்க்காரியா கமிஷன் குற்றச்சாட்டுக்கு விளக்கம்
சர்க்காரியா கமிஷன் மற்றும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகள் குறித்துப் பேசிய அவர், "சர்க்காரியா கமிஷனுக்குப் பிறகு எத்தனையோ ஆட்சிகள் மாறிவிட்டன, அதில் உண்மை இருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுத்திருப்பார்கள்.
அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு விளக்கம்
அதேபோல, அமலாக்கத்துறை ஜோடிக்கும் வழக்குகளில் 95% நிரூபிக்கப்படாமல் தள்ளுபடி செய்யப்படுகின்றன. உங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தலைவர்கள் மீதே அமலாக்கத்துறை வழக்கு போட்டுள்ளது உங்களுக்குத் தெரியாதா?" எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், முதலமைச்சரான பிறகு தம்மைச் சந்தித்த விஜய் "மன்னிப்பு கேட்டதை" நினைவூட்டிய ஸ்டாலின், ஒரு முதலமைச்சருக்கான கண்ணியத்தோடு நடந்துகொள்ள வேண்டும் என்றும், ரீல்ஸ் போட்டு ஆட்சி நடத்தாமல் சட்டம்-ஒழுங்கு மற்றும் மக்கள் நலனில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் விமர்சித்தார்.
TVK IT Wing பதிலடி
மு.க.ஸ்டாலினின் இந்த வீடியோவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ ஐடி விங் சமூக வலைதளங்களில் உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.
பிம்பம் உடைந்ததில் பதற்றம் தொற்றிக் கொண்டதோ?
"பல ஆண்டுகளாகக் கட்டமைக்கப்பட்ட 'சிறை சென்ற தியாகி' என்ற போலி பிம்பம் உடைந்ததில் பதற்றம் தொற்றிக் கொண்டதோ? அத்தனை நீளமாகப் பேசியும் 'Detention Copy' பற்றி மட்டும் மூச்சுவிடவில்லை.
கட்டுமரக் கதைகளாலும் கட்டுக்கதைகளாலும் கட்டமைக்கப்பட்ட பொய்பிம்பம், மெய்யைத் தாக்குப்பிடிக்காது என்பதை இன்று வெளியான காணொளி நிரூபித்துள்ளது" என தவெக தரப்பில் விமர்சிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் மேலும் சூட பிடித்துள்ளது.
=====