

Mullaperiyar Dam 1886 Lease Agreement History
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்
தென் தமிழகத்தின் நீர்ப்பாசன வரலாற்றில் மிக முக்கியத்துவம் வாய்ந்த முல்லைப் பெரியாறு அணை ஒப்பந்தம் கையெழுத்தாகி இன்றுடன் 140 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
முல்லைப் பெரியாறு அணைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கும், பிரிட்டிஷ் இந்திய அரசுக்கும் இடையே 1886-ஆம் ஆண்டு அக்டோபர் 29-ஆம் தேதி 999 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் கையொப்பமானது.
பெரியாறு நீரைத் தமிழகத்தின் வட பகுதிகளுக்கு திருப்புவதற்கான திட்டத்துக்கு நிலம் மற்றும் நீர்ப் பயன்பாட்டு உரிமைகளை வரையறுத்த அடிப்படை ஆவணமாக இந்த ஒப்பந்தம் அமைந்தது.
பெரியாறு நீரைத் திருப்பும் திட்டத்தின் பின்னணி
மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகி மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக் கடலில் கலக்கும் பெரியாறு ஆற்றின் நீரை, கிழக்கு நோக்கித் திருப்பி மதுரை உள்ளிட்ட தென் தமிழகப் பகுதிகளில் நிலவிய நீர்ப்பற்றாக்குறையைத் தீர்ப்பதும், விவசாயத்திற்குத் தேவையான நீரை வழங்குவதும் இதன் முக்கிய நோக்கமாகும்.
கர்னல் ஜான் பென்னி குவிக் முயற்சி
பலகட்ட ஆய்வுகள், திட்ட மதிப்பீடுகள் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளுக்குப் பிறகு, கர்னல் ஜான் பென்னி குவிக் முயற்சியில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
திருவிதாங்கூர் மகாராஜாவின் நிபந்தனைகள்
அணை கட்டப்பட வேண்டிய பகுதி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதிக்குள் இருந்ததால், திருவிதாங்கூர் மகாராஜா மூலம் திருநாள் என்பவரின் ஆட்சிக் காலத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆண்டுதோறும் தன் நாட்டு மக்களுக்கு ஏற்படும் வெள்ளப்பெருக்கைக் குறைக்கலாம் என்பதால் மகாராஜா இதற்கு ஒப்புக்கொண்டார்.
இருப்பினும் சில நிபந்தனைகளை விதித்தார்:
அணை கட்டுவதற்கான முழு செலவையும் சென்னை மாகாண அரசே ஏற்க வேண்டும்.
நீரைப் பயன்படுத்துவதைத் தவிர, குத்தகை நிலத்தின் மீது வேறு உரிமை கோரக்கூடாது.
அணையின் பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பு செலவுகளைத் திருவிதாங்கூர் அரசு மீது திணிக்கக் கூடாது.
999 ஆண்டுகள் குத்தகையின் முக்கிய அம்சங்கள்
திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சார்பில் திவான் ராமையங்காரும், பிரிட்டிஷ் இந்திய அரசின் சார்பில் ஹானிங்டனும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். குத்தகைக் காலம் 999 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டு, 1886 ஜனவரி 1-ஆம் தேதி முதல் கணக்கிடப்படும் என்று குறிப்பிடப்பட்டது.
கட்டண விவரங்கள்
அணை நீர் தேங்குவதற்காகப் பயன்படுத்தப்படும் 8,000 ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுக்கு ரூ.40,000 குத்தகைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு மேலாகப் பயன்படுத்தப்படும் நிலத்துக்கு ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.5 வீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டது.
அணைக் கட்டுமானம்
ஒப்பந்தத்தைத் தொடர்ந்து கடினமான நில அமைப்பு மற்றும் போக்குவரத்து சவால்களை எதிர்கொண்டு பணிகள் நடைபெற்று, 1895-ஆம் ஆண்டில் அணைக் கட்டுமானம் நிறைவுற்று வைகை ஆற்றுப் பள்ளத்தாக்குப் பகுதிகளுக்கு நீர் திருப்புவது நடைமுறைக்கு வந்தது.
தென் தமிழகத்தின் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் வாழ்வாதாரத்தில் நீண்டகாலத் தாக்கத்தை ஏற்படுத்திய பெரியாறு திட்டத்தின் வரலாற்றில் அக்டோபர் 29-ஆம் தேதி என்றென்றும் சிறப்புமிக்க இடத்தைப் பெற்றுள்ளது.
==============