

திருவாரூரில் நடைபெற்ற திமுக முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்லத் திருமண விழாவில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மாநிலச் செயலாளருமான முத்தரசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
குட்டிக்கதை சொன்ன முத்தரசன்
“மதிவாணன் நல்ல கொள்கைப் பற்றுடையவர். அதுதான் இன்று நம் நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் ஒன்று. இதை ஏன் சொல்கிறேன் என்றால், ஆற்றுப் படுகைகளில் ஆடு, மாடுகள் மேய்ந்து கொண்டிருக்கும்போது, திடீரென அந்தப் பக்கமுள்ள கரையைப் பார்க்கும்.
‘இக்கரைக்கு அக்கரை பச்சை’
‘இக்கரைக்கு அக்கரை பச்சை’ என்று சொல்வதைப் போல, அந்தப் பக்கம் கொஞ்சம் பசுமையாகத் தெரிவது போல் இருக்கும். முதலில் ஒரு குதிரை போகும், பின்னர் ஆடு, மாடுகள் என போக ஆரம்பிக்கும். கடைசியில் மந்தையே அந்தப் பக்கம் உள்ள கரைக்குச் சென்றுவிடும்.
சில சமயம் நிலைமை மோசமாகும்
ஆனால், அங்குப் போனால் நிலைமை இதைவிட மிகவும் மோசமாக இருக்கும். இங்கேயாவது கொஞ்சம் பச்சையாகத் தெரியும், அங்கோ ஒன்றுமே இருக்காது, வறண்டு காய்ந்து போயிருக்கும்.
திரும்பி வரவும் பயமாக இருக்கும்
‘ஆஹா.. அவசரப்பட்டு வந்துவிட்டோமே’ என்று நினைத்து, வந்த உடனேயே திரும்ப நினைத்தால், பழைய படுகை நம்மை ஏற்றுக்கொள்ளுமா என்ற பயத்தில், ‘கொஞ்ச நாள் இங்கேயே இருந்துவிட்டாவது போவோம்’ என்று நினைப்பார்கள்.
யாரையும் காணாமல் அடிக்க முடியாது
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தேன். யாரையோ காணவில்லை என்றார்களாமே.. ஆனால், அரசியலில் யாரையும் யாரும் அவ்வளவு எளிதாகக் காணாமல் அடித்துவிட முடியாது. அதற்கு ஒருபோதும் வாய்ப்பும் இல்லை.
நட்போடு பழகுகிறோம்
நானும், ஸ்டாலினும் ஒரே ஊர்க்காரர்கள், ஒரே தொகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் எப்போதுமே அண்ணன்-தம்பியாகத்தான் பழகி வருகிறோம்.
எப்போது வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் நேரில் சந்தித்துப் பேசிக் கொள்வோம். எங்களுக்குள் எந்தப் பெரிய பிரச்சினையும் எப்போதும் இருந்ததில்லை.
உற்சாகமாக இருக்கிறார் ஸ்டாலின்
எந்தவொரு சோர்வும் இல்லை. அதே வழக்கமான அன்பான வரவேற்பு; அதே வழக்கமான உபசரிப்பு. அப்படித்தான் எங்களுடைய உரையாடல் அமைந்தது. இந்த உரையாடல் எப்போதும் தொடரும்.
கடந்த ஆண்டு மேட்டூர் அணை திறப்பு
கடந்த ஆண்டு ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது. டெல்டா மாவட்டங்கள் செழித்தன. விவசாயிகள் எல்லாம் மிகுந்த மகிழ்ச்சியோடு குறுவை சாகுபடியை மேற்கொண்டு சந்தோஷமாக இருந்தார்கள். கடந்த ஆண்டு குறுவை சாகுபடி வழக்கத்தை விட அதிகமாகவே நடைபெற்றது.
வறண்ட மேட்டூர் அணை
இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இந்தச் சூழலில் டெல்டாவில் ஒருபோக சாகுபடியாவது நடைபெறுமா? அதற்குரிய முயற்சிகளையாவது அரசு மேற்கொள்ளுமா? கர்நாடகா ஏற்கனவே காவிரி ஆற்றின் குறுக்கே நான்கு அணைகளைக் கட்டி வைத்துள்ளனர். இப்போது புதிதாக மேகதாதுவில் ஒரு அணையைக் கட்டுவதாகச் சொல்கிறார்கள்.
தவெக அரசு என்ன செய்யப் போகிறது?
இதைத் தடுப்பதற்கும், தண்ணீர் இல்லாத இந்தச் சூழ்நிலையில் தமிழக விவசாயிகளைக் காப்பதற்கும் அரசு என்ன செய்யப் போகிறது என்று தெரியவில்லை.
பஞ்சத்தில் டெல்டா மாவட்டங்கள்?
டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு ஒருபோக சாகுபடியாவது நடைபெற வாய்ப்புகள் ஏற்படுமா, அல்லது டெல்டா பகுதி கடும் பஞ்சத்தை நோக்கி நகருமா என்ற அச்சமும் கவலையும் விவசாயிகளிடையே எழுந்துள்ளது,” என்று முத்தரசன் வேதனையோடு பேசினார்.
====================