
அண்ணாமலையார் கோவில் :
உலகப் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றான திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் ஆலயத்திற்கு நாள்தோறும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பவுர்ணமியின் போது கிரிவலம் செல்ல 10 லட்சம் பேர் வரை வருகிறார்கள். இங்கு நடைபெறும் கார்த்திகை தீபத் திருவிழாவின் போது பக்தர்கள் வெள்ளெமன திரண்டு வந்து, அண்ணாமலையாரை தரிசிப்பார்கள். இந்தநிலையில், தரிசன டிக்கெட் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு செய்து இருப்பது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தரிசன டிக்கெட் விலை அதிகரிப்பு :
இதுபற்றி, நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள அறிக்கையில், “ திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலின், சிறப்பு தரிசன கட்டணத்தை, 50 ரூபாயில் இருந்து, 100 ரூபாயாக உயர்த்தப் போவதாக, அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்திருப்பது, கண்டனத்திற்கு உரியது. பணம் படைத்தவர்களும், அதிகார பலம் உடையவர்களும், எவ்வித தடையுமின்றி எளிதாக இறைவனை சென்று தரிசிக்கையில், ஏழை, நடுத்தர மக்கள் மீது மட்டும், எதற்காக நிதிச்சுமை ஏற்றப்படுகிறது.
அடிப்படை வசதிகள் இல்லை :
கடந்த நான்கு ஆண்டுகளாக, கோவில்களில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலால், பக்தர்கள் அவதிப்படுவதை, அறநிலையத்துறை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த திராணியின்றி, கட்டண உயர்வு வாயிலாக, கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க முயற்சிக்கிறதா, இந்து விரோத அரசு?.
கட்டண உயர்வு பக்தர்களை பாதிக்கும் :
கோடி, கோடி ரூபாயாக கொள்ளை அடிக்கும், திமுக தலைவர்களுக்கு வேண்டுமானால், 50 ரூபாய் உயர்வு என்பது சாதரணமாக இருக்கலாம். ஆனால், நான்கு பேர் உடைய ஏழை குடும்பத்துக்கு, தரிசன கட்டணம், 400 ரூபாய் என்பது ஒரு நாள் ஊதியம். எனவே, ஏழை மக்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை அரசு உடனே திரும்பப் பெற வேண்டும் என, முதல்வர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன். இல்லையேல், அண்ணாமலையார் சாட்சியாக, தமிழக பாஜ சார்பில், மிகப் பெரிய அறப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்” என்று அவர் எச்சரித்துள்ளார்.
====