

முதல்வருக்கு தோல்வி பயம்
தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்த பட்டியல் நவம்பர் 4ம் தேதி தொடங்குகிறது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்தநிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், ”தோல்வி பயத்தால் தமிழக முதல்வர் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்து வருகிறார். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு நேரு காலத்திலிருந்தே நடைபெறுகிறது. கொளத்தூர் தொகுதியில் 9,000 வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர்.
மது விற்பனையில் அக்கறை
தமிழக அரசு அனைவரையும் மது குடிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மது விற்பனைக்கு ரூ.600 கோடிக்கு இலக்கு நிர்ணயித்தது. ஆனால், அது ரூ.750 கோடியை தாண்டிவிட்டது. தீபாவளியின் போது விற்பனை உச்சத்தை தொட்டு விட்டது. இதுதான் அரசின் சாதனையா?
குறுவை சாகுபடி - முதல்வருக்கு தெரியாதா?
ஜூன் மாதத்தில் 6.30 லட்சம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு, செப்டம்பரில் அறுவடை செய்யப்படும் என்பது குறித்து முதல்வருக்கு முன்கூட்டியே தெரியும். அப்படி இருந்தும், விவசாயிகளிடமிருந்து 60 சதவீத நெல் கொள்முதல் செய்யவில்லை. தற்போது 40 சதவீதம் அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் திடீரென மழை வந்துவிட்டதாக வேளாண்மைத்துறை அமைச்சர் கூறுகிறார்.
அவசரகால இயந்திரங்கள் எங்கே?
ஆனால் காலநிலையை முன்கூட்டியே அறிந்துகொள்ள ரூ.10 கோடிக்கு இயந்திரங்கள் வாங்குவதாக ஏற்கெனவே சட்டப்பேரவையில் அப்போது நிதியமைச்சராக இருந்த பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார். இதில் யார் கூறுவது பொய் என்பது தெரியவில்லை?. முதல்வர் தான் இதற்கு உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும்” இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
=====