நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பு
nainar nagendran press meet தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் அது மாநாடாகவே அமைந்துவிட்டது.
என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும்
இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்தாத அளவுக்கு இந்த கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்றார்கள். நிச்சயமாக உறுதியாக தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
தேமுதிக, ராமதாஸ் வருவார்கள்
தே.மு.தி.க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் ராமதாஸ் அணி எங்களது தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவது தொடர்பாக ஒரு வார காலத்துக்குள் பதில் கிடைக்கும்.
முதல்வர் பொய்த் தகவல்கள்
கடந்த 5 ஆண்டுகளில் தமிழக முதலமைச்சர் முழுக்க முழுக்க பொய்யான தகவல்களை வழங்கி வருகிறார். தேர்தல் வருவதால் தி.மு.க.விற்கு பயமும், நடுக்கமும் வந்து விட்டது.
திருநெல்வேலி அல்வாவை கொடுத்துள்ளார்
பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவேன் என்று வாக்குறுதி கொடுத்து விட்டு அரசு ஊழியர்களை ஏமாற்றி விட்டார். இதன் மூலமாக அவர் அரசு ஊழியர்களுக்கு திருநெல்வேலி அல்வாவை கொடுத்துள்ளார். யாரையும் யாருக்கும் அடிமையாக வைக்கக்கூடிய கட்சி பா.ஜ.க. இல்லை.
விஜய்க்கு என்ன தெரியும்?
அனைவரும் சுதந்திரமாக செயல்படலாம். தமிழக வெற்றிக்கழகத்தில் எத்தனை மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள் என்பது கூட அதன் தலைவருக்கு தெரியாது.
வி்ஜய்க்கு அழுத்தம் தரவில்லை
விஜய்க்கு பா.ஜ.க. எந்த அழுத்தமும் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. பா.ஜ.க.வில் ஊழல் இல்லை. தீய சக்தி இல்லை. ஆகையால் பா.ஜ.க.வை பற்றி விஜய் பேசி இருக்க மாட்டார் என்று தெரிவித்தார்.
அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள்
மேலும், பேசிய அவர் தி.மு.க.வை ஆட்சியை விட்டு அகற்ற வேண்டும் என ஒற்றை எண்ணத்தில் இருக்கும் அனைத்து கட்சிகளும் ஒரே குடைக்குள் வர வேண்டும் என்பதே எனது விருப்பம்.
அந்த வகையில் தான் டி.டி.வி. தினகரனும் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளார். அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை என்று முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியே சொல்லி இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.