
கரூர் துயரச் சம்பவம் - விசாரணை
கரூரில் நேற்று முன்தினம் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பெண்கள் குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த சுமார் 100 பேர் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவம் தமிழகம் மட்டுமல்லாது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது. ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு, அவர் விசாரணை நடத்தி வருகிறார்.
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு
இந்த நிலையில் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூரில் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் கூட்ட நெரிசலால் காயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை சந்தித்து நலம் விசாரித்தார். இந்நிகழ்வின் போது எல். முருகன் ஆகியோர் உடனிருந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள் ஏழை மக்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், “ கரூரில் நடந்தது அதிர்ச்சியான சம்பவம், ஆர்வ மிகுதியால் பொதுமக்கள் வந்ததால் நடந்த ஒன்று. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏழை எளிய மக்கள். அவர்கள் கதறி அழுவதை என்னால் பார்க்க முடியவில்லை. வார்த்தைகளால் ஆறுதல் கூறவும் முடியவில்லை.
இந்தியாவில் இனி நடக்கக் கூடாது
இனி இதுபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவில் நடக்கக் கூடாது. கரூர் வருவதாக பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார். பல்வேறு காரணங்களால் அவரால் வர இயலவில்லை என்பதால், மத்திய அரசு சார்பில் நாங்கள் வந்து இருக்கிறோம்.
யாரையும் குறை கூற விரும்பவில்லை
இந்தச் சம்பவத்தில் எந்த ஒரு கட்சியையும் குறிப்பிட்டு பேச விரும்பவில்லை. யாரையும் குறை கூறவும் விரும்பவில்லை. கட்சி சார்பாக விமர்சனங்களை முன் வைக்கவும் நான் இங்கு வரவில்லை. யார் மீதும் தவறு என்பதை நிர்ணயிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு துணை நிற்கும்” இவ்வாறு அந்த பேட்டியில் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
===================