

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாகக் கடந்த சில வாரங்களா சமூக ஊடகங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு, தற்போது அவரே ஒரு புதிய வீடியோ மூலம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
திருச்சி கிழக்கில் லாரன்ஸ் போட்டி? விவகாரத்தின் பின்னணி
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழக முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர், முதலமைச்சர் பதவியேற்புக்கு முன்னதாக அவர் தனது திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை ராஜிநாமா செய்தார்.
இதனால் காலியாக உள்ள திருச்சி கிழக்கு தொகுதிக்கு நடைபெறவுள்ள இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ராகவா லாரன்ஸ் களம் இறங்கப்போவதாகப் பேச்சுகள் எழுந்தன.
சர்ச்சை பிரஸ் மீட்டும் விளக்கமும்
முன்னதாக, அரசியலுக்கு வருவது குறித்து மக்களிடம் கருத்து கேட்டிருந்த லாரன்ஸ், அதன்பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் விஜய்யின் புதிய ஆட்சி குறித்து பேசும்போது 'தெருநாய்கள்' என்ற உதாரணத்தைக் குறிப்பிட்டிருந்தார்.
தெருநாய் ஒப்பீடு விவகாரம்
இது மக்கள் மத்தியில் "மக்களை தெருநாய்களுடன் ஒப்பிடுவதா?" என்ற பெரும் விவாதத்தையும் எதிர்ப்பையும் கிளப்பியது. தனது நெருங்கிய நண்பர்கள், அறக்கட்டளை உறுப்பினர்கள் மற்றும் தாயாரின் வேண்டுகோளுக்கு இணங்க, இந்த சர்ச்சைகளுக்கு புதிய வீடியோவில் ராகவா லாரன்ஸ் விளக்கமளித்துள்ளார்.
திருச்சி கிழக்கில் போட்டியிடுவதில்லை
புதிய வீடியோவில் தான் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்பதை லாரன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.
"முதலமைச்சர் விஜய்யுடன் ஆரம்பக் காலத்திலிருந்தே உழைத்தவர்களுக்கு தான் இந்த வாய்ப்பு கிடைக்க வேண்டும். இடையில் வந்து அந்த பலனை நான் அனுபவிப்பது சரியாக இருக்காது. இதை விஜய் அவர்களே தீர்மானிக்க வேண்டும். நான் இப்போது மகிழ்ச்சியாகவே இருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், தனது அறக்கட்டளை மூலம் கடந்த 20 வருடங்களாகத் தனது ஆதரவில் வளர்த்து வரும் மாற்றுத்திறனாளி இளைஞர் ராஜகோபால் என்பவரை அறிமுகப்படுத்தி, தனது சேவை மனப்பான்மை குறித்தும் நெகிழ்ச்சியாகப் பகிர்ந்துள்ளார்.
அரசியல் வருகை உறுதி?
திருச்சி கிழக்கு தொகுதியில் தான் நிற்கப்போவதில்லை என்று கூறியுள்ளாரே தவிர, அரசியலுக்கு வரமாட்டேன் என்று கூறவில்லை. தான் விரைவில் இணையவுள்ள அரசியல் கட்சி எது, எந்த தொகுதியில் போட்டியிடப் போகிறேன் என்ற விவரங்களை முறைப்படி அறிவிப்பேன் என்று லாரன்ஸ் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் திரைப்படங்கள்
மேலும், லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' மற்றும் 'காஞ்சனா 4' ஆகிய இரு திரைப்படப் பணிகளில் தற்போது பிஸியாக இருப்பதாகவும், விரைவில் தனது அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
=====