
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கை :
NTK Seeman on TNPSC Group 4 Exam 2025 : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி - 4 (GROUP4) தேர்வு வினாத்தாளில் தமிழ் மொழி குறித்த பெரும்பாலான கேள்விகள் தேர்வு பாடத்திட்டத்திற்கு அப்பால், மிகக்கடினமான கேள்விகளாக இடம்பெற்றதால் தேர்வர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, அரசுப்பணியாளர் தேர்வாணையம் தொடர்ந்து அலட்சியமாகச் செயல்பட்டு தேர்வர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு அரசில் 3,395 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான தொகுதி-4 தேர்வினை(TNPSC Group 4) ஏறத்தாழ 11 லட்சம் 50 ஆயிரம் தேர்வர்கள் எழுதியுள்ள நிலையில், வினாத்தாளில் ஆங்கிலமொழிப் பகுதி வினாக்கள் எளிதாகவும், தமிழ்மொழிப்பகுதி வினாக்கள் மிகக்கடினமானவும் இருந்ததால் தேர்வர்கள் பெரும் மனவுளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக தமிழ்மொழிப் பகுதியில் பண்டைய ஓலைச்சுவடிகளில் இருந்தெல்லாம் கேள்விகள் கேட்கப்பட்டிருப்பது தேர்வர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூடத் தேர்ச்சி அடைய முடியாத அளவிற்கு கடினமான வினாக்கள் தமிழ்மொழி பகுதியில்(Tamil Question in TNPSC) இடம்பெற்றுள்ள நிலையில், ஆங்கிலப் பகுதி வினாக்கள் எளிதானதாக இடம்பெற்றுள்ளது தேர்வின் சமநிலையை முற்றாகச் சீர்குலைத்துள்ளது. இதனால் அரசு வேலை கனவோடு இராப்பகலாகக் கண்துஞ்சாது படித்து, கடின உழைப்பினை செலுத்திய தமிழிளம் தலைமுறை பிள்ளைகளின் எதிர்காலம் இருளாகி, மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அரசுப் பணியாளர் தேர்வில் முறைகேடு :
இதுதான் திராவிட மாடல் திமுக அரசு, தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கும் முறையா? இதுதான் தமிழ் மொழிக்கு அளிக்கும் முக்கியத்துவமா? இதன் மூலம் தமிழ்வழியில் பயின்ற தேர்வர்களைப் போட்டியிலிருந்தே வெளியேற்றும் சூழ்ச்சி வெட்டவெளிச்சமாகியுள்ளது. அரசுப் பணியாளர் தேர்வில் மிகப்பெரிய முறைகேடுகளை(TNPSC Group 5 Scam) செய்வதற்காகவே தொகுதி-4 தேர்வில் பாடத்திட்டத்திற்கு அப்பாலிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு, தமிழ்மொழி வினாக்கள் மிகக்கடினமானதாக வேண்டுமென்றே உருவாக்கப்பட்டுள்ளதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
மேலும் படிக்க : நிராகரிக்கப்பட்ட பாஸ்போர்ட் விண்ணப்பம்: நீதிமன்றத்தை நாடிய சீமான்
ஆகவே, தொகுதி-4 (GROUP-4) தேர்வில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளுக்கு தமிழ்நாடு அரசே பொறுப்பேற்று, தேர்வின் சமநிலை மற்றும் நடுநிலைத்தன்மையைக் காக்கும் பொருட்டு, நடந்து முடிந்த தொகுதி-4 தேர்வினை ரத்து(TNPSC Group 4 Cancelled) செய்துவிட்டு, விரைவில் மறுதேர்வு நடத்த வேண்டுமென்று வலியுறுத்துகிறேன். மேலும், எதிர்காலத்தில் எந்தவொரு அரசுப்பணியாளர் தேர்விலும் இதுபோன்ற குளறுபடிகள் மீண்டும் ஏற்படா வண்ணம் மிகக்கவனமாகச் செயலாற்ற வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு சீமான்(Seeman on TNPSC) தெரிவித்துள்ளார்.