”ஒருவழியாக திமுகவில் இணைந்தார் ஓ.பன்னீர்செல்வம்” : எடப்பாடி மீது தாக்கு, ஸ்டாலினுக்கு பாராட்டு: தேர்தலில் போட்டியிட ஆசை

O. Panneerselvam Join DMK : மூன்று முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், திமுகவில் இணைந்தார். எடப்பாடியை விமர்சித்த அவர், முதல்வர் ஸ்டாலினை பாராட்டி தள்ளினார்.
O. Panneerselvam, who served as the Chief Minister for three terms, joined DMK
O. Panneerselvam, who served as the Chief Minister for three terms, joined DMKgoogle
2 min read

ஓ. பன்னீர்செல்வம் ( ஓபிஎஸ் )

O. Panneerselvam Join DMK : ஓ.பன்னீர்செல்வம், அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவர். முக்குலத்தோர் சமூகத்தின் முக்கிய புள்ளியாக வலம் வருபவர். ஜெயலலிதா, சசிகலாவின் நம்பிக்கைக்கு உரியவர். போடி தொகுதியில் இருந்து 5 முறை எம்எல்ஏவாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஓ.பன்னீர்செல்வம்.

மூன்று முறை முதல்வர்

முதல்வராக இருந்த ஜெயலலிதாவிற்கு சட்ட ரீதியாக சிக்கல் வரும்போது எல்லாம், முதல்வராக இருந்து கைகொடுத்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு முதல்வாராக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், சசிகலாவுக்கு அந்தப் பதவியை விட்டுத்தர மறுத்து, தர்மயுத்தம் நடத்தினார்.

அதிமுகவில் இருந்து 18 எம்எல்ஏக்களுடன் வெளியேறிய ஓ.பன்னீர்செல்வம், பாஜகவின் முயற்சியால் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைந்து, துணை முதல்வரானார். 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோற்ற பிறகு, எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் இடையே மோதல் வெடித்தது.

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கம்

இதன்காரணமாக, அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டார் ஓ.பன்னீர்செல்வம். கட்சியின் முழு அதிகாரமும் எடப்பாடி கைக்கு சென்றது. மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் தொகுதியில் நின்ற ஓ.பன்னீர்செல்வம், தோல்வியை தழுவினார்.

ஓபிஎஸ் முயற்சி - எடப்பாடி உறுதி

எப்படியாவது அதிமுகவில் மீண்டும் சேர்ந்து விட வேண்டும் என முயற்சித்த ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவை நடத்தி வந்தார். அவர் எவ்வளவு முயற்சித்தும், அதிமுகவில் மீண்டும் சேர்க்க வாய்ப்பில்லை என்பதில், எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் இருந்தார்.

ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு

கடந்தாண்டு ஜூலை 31ம் தேதி நடைப்பயிற்சியின் போது முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ், அன்று மாலையை அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நலம் விசாரித்தார்.

இதனை தொடர்ந்து, கடந்த 20 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்தார்.

திமுக ஆட்சியை பாராட்டி அவர், தான் அங்கு செல்ல இருப்பதை சூசகமாக வெளிப்படுத்தினார்.

விலகிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

ஓ.பன்னீர்செல்வம் தீர்க்கமான முடிவை எடுக்காததால் அவரது ஆதரவாளர்கள் படிப்படியாக விலகி திமுக, அதிமுக, தவெகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால், தனியாக நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார் ஓபிஎஸ்.

திமுகவில் ஐக்கியமான ஓபிஎஸ்

அதிமுகவின் கதவை எடப்பாடி முழுமையாக அடைத்து விட்டதால், வேறு வழியின்றி இன்று திமுகவில் ஐக்கியமாகி இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்

இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு தனது ஆதரவாளர்களுடன் வந்த ஓ.பன்னீர்செல்வம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.

அமைச்சர் சேகர்பாபு அழைத்து வர சென்னை அறிவாலயம் வந்த ஓ.பன்னீர்செல்வம், முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, சால்வை அணித்து திமுகவில் இணைந்தார்.

திமுகவில் ரவீந்திரநாத்

அதிமுக முன்னாள் எம்பியும், ஓபிஎஸ் மகனுமான ரவீந்திரநாத்தும் திமுகவில் இணைந்தார். போடி தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுவார் எனத் தெரிகிறது. திமுகவில் துணைப் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

திமுக தான் ஆட்சிக்கு வரும்

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓ. பன்னீர்செல்வம், ” 5 ஆண்டுகால மக்களுக்கு அர்ப்பணித்த ஆட்சி திமுகவின் ஆட்சி. எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் கால அறிவிப்புகள் பூஜ்ஜியமாக தான் இருக்கிறது. மீண்டும் தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமையும்.

தாய்க்கழகத்தில் இணைந்தது மகிழ்ச்சி

திராவிட கழகத்தின் தாய்கழகத்தில் மீண்டும் மன மகிழ்ச்சியுடன் இணைந்திருக்கிறேன். அண்ணா தொடங்கிய கருணாநிதி கட்டிக்காத்த திமுகவில் இணைந்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி

என்னை இணைத்துக்கொண்ட திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அண்ணா, கருணாநிதி காட்டிய வழியில் அனைவரையும் அரவணைத்து அரசியல் பண்பாடு உடன் ஆட்சியையும், கட்சியையும் ஸ்டாலின் வழிநடத்துவதை உணர்ந்து திமுகவில் இணைந்துள்ளேன்.

எடப்பாடி என்றுமே வெற்றிபெற மாட்டார்

அரசியலில் இன்று சர்வாதிகாரியாக, ஆணவப்போக்குடன் நடந்துகொள்ளும் எடப்பாடி பழனிசாமி இனி வெற்றி பெற முடியாது. இந்த சூழலை அதிமுகவில் அவர் உருவாக்கியிருக்கிறார்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு லட்சகணக்கான அதிமுக தொண்டர்கள், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு

நாடு திமுக தலைவர் ஸ்டாலினை உற்று நோக்குகிறது. அரசியல் கட்சியை எப்படி நடத்த வேண்டும் என்ற இலகணத்துடன் ஸ்டாலின் கட்சியை நடத்துகிறார். அனைத்து துறைகளிலும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருகிறார் மு.க.ஸ்டாலின்.

அதிமுகவை அழிக்கிறார் எடப்பாடி

அதிமுகவில் தற்காலிக பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை அழிவு பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டங்களிலிருந்து எந்த ஒரு தலைவரும் வர கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி கவனமாக இருந்து, அங்கிருப்பவர்களை அழிக்க முனைப்பு காட்டுகிறார்.

தொண்டனாக திமுவில் இணைந்தேன்

நான் முதல்வராக பொறுப்பேற்றிருந்தபோது, கருணாநிதி என்னை ‘பச்சை தமிழர் பன்னீர் செல்வம்’ என பாராட்டினார். திராவிட இயக்கத்தையும், கொள்கையையும் காக்க திமுகவே தலைசிறந்த இயக்கம். திமுகவில் நான் ஒரு தொண்டனாக இணைந்திருக்கிறேன்.

திமுகவின் வளர்ச்சிக்கு பாடுபடுவேன். இது நான் சுயமாக சிந்தித்து எடுத்த முடிவு. அனைவரையும் அரவணைத்து செல்லும் போக்கு அதிமுகவில் இல்லை. அது மறைந்துவிட்டது.

வாய்ப்பு கொடுத்தால் போட்டி

சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக போட்டியிடுவேன். மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவுக்கு என்றும் ஆதரவு கொடுப்பேன். கட்டுப்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார்.

எம்எல்ஏ பதவி ராஜினாமா

திமுகவில் இணைந்த பிறகு தலைமைச் செயலகம் சென்ற ஓ.பன்னீர்செல்வம், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். ஓபிஎஸ் ஆதரவாளரும், உசிலம்பட்டி தொகுதி எம்எல்ஏவுமான ஐயப்பனும் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

===============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in