

திரிசங்கு நிலையில் ஓ.பன்னீர்செல்வம் :
OPS Supporters Advice To O. Panneerselvam Join DMK : அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வம் சேர்த்து கொள்ளப்பட வாய்ப்பு இருப்பதாக கடந்த வாரம் வரை நம்பிக்கை இருந்தது. எப்படியாவது தினகரன், அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வத்தை சேர்த்து விடுவார் என்று கூறப்பட்டது.
இந்த ஊகங்களுக்கு எல்லாம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.
அதிருப்தியில் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள்
ஒரேயடியாக அதிமுக வழியை எடப்பாடி அடைத்துப் பூட்டிவிட்டதால், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர்.
எடப்பாடி பழனிசாமி திடமான முடிவு எடுக்க தென் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் பின்னணியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.
எடப்பாடி வெற்றியை தடுத்த ஓபிஎஸ் அணி
‘கடந்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தவற விட்டதற்கு தென் மாவட்டங்களில் அதிமுக-வுக்கு ஏற்பட்ட ஒரு சரிவும் முக்கியக் காரணம்.
கட்சிக்குள் அப்போது நிலவிய ‘நீயா நானா’ சண்டையில் இபிஎஸ் மீண்டும் முதலமைச்சர் ஆகிவிடக் கூடாது என்பதில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக செயல்பட்டது.
ஓ.பன்னீர்செல்வத்தை ஓரம் கட்டிய எடப்பாடி ஆதரவாளர்கள்
தென் மாவட்ட தொகுதிகளில் ஏனோ தானோ என தேர்தல் பணிகளை மேற்கொண்டார்கள். எடப்பாடிக்கு ஆதரவான சிலரை தோற்கடிக்க உள்ளடி வேலைகளை பார்த்தார்கள்.
எனவேதான் 2021ல் தேர்தல் முடிந்ததுமே தென் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள், ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் வரவேண்டும் என்ற கோஷத்தை முதல் முறையாக எழுப்பினார்கள். அதன் பிறகு ஓபிஎஸ் எப்படி ஓரங்கட்டப்பட்டார்.
எனவே, எடப்பாடி பழனிசாமி ஓ.பன்னீர்செல்வத்தை உள்ளே கொண்டு வர விரும்பினாலும், தென் மாவட்டங்களில் இருக்கும் நிர்வாகிகள் அவரை கொண்டு வர தயாராக இல்லை என்பதில் உறுதியாக நிற்கிறார்கள்.
எந்தப் பக்கம் செல்வது?
இதனால், எந்தப் பக்கம் செல்வது என்று தெரியாமல், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குழம்பி போய் இருக்கிறார்கள். வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் போன்றோர் திமுகவிற்கு தாவி விட்டார்கள். ஓபிஎஸ் பக்கம் நின்றான எம்பியான தர்மரும், எடப்பாடி பக்கம் சென்று விட்டார்.
திமுகவா? தவெகவா?
எனவே, இனி திமுகவுக்கு செல்வதா? அல்லது தமிழக வெற்றிக் கழகத்தை நோக்கி பயணிப்பதா? என ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் சிந்திக்க தொடங்கி விட்டதாக தெரிகிறது.
திமுக, தவெகவில் போய் சேர்ந்து விடுவதா? அல்லது கூட்டணி அமைப்பதா என்றும் அவர்கள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
ஓபிஎஸ்-க்கு கடும் நெருக்கடி
தவெகவில் இணைந்து போட்டியிட்டால், அதிமுக தோற்க நாம் காரணமாக இருந்து விடுவோம், அதேசமயம் திமுக கூட்டணிக்கு சென்றால், சில தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்,
இது வருங்கால அரசியலுக்கு நல்லது என்று ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கடி கொடுக்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
ஓபிஎஸ் கையில் முடிவு!
இறுதி முடிவு எடுக்க வேண்டியது ஓ.பன்னீர்செல்வம் கையில் தான் இருக்கிறது. அவர் தொடர்ந்து மவுனம் சாதித்தாலோ, இன்னும் அதிமுகவில் சேர வாய்ப்பு இருக்கும் என்ற நம்பிக்கையில் காத்திருந்தாலோ,
உடன் இருக்கும், ஆதரவாளர்கள் சிலரும் திமுக, தவெகவுக்கு செல்ல வாய்ப்பு இருக்கிறது. இதனால், ஓ. பன்னீர்செல்வம் முழுமையாக தனி மரமாகி, அரசியல் எதிர்காலத்தை தொலைத்து விடுவார் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
==================