உதகை–மேட்டுப்பாளையம் மலைப்பாதை பல இடங்களில் மண்சரிவு : பேருந்து ஓட்டுனர் உயிரி*ப்பு : முழுவீச்சில் சீரமைப்பு பணிகள்..!

தொடர் மழை காரணமாக கடும் மண் சரிவு போக்குவரத்து பாதிப்பு மக்கள் அவதி இயல்பு வாழ்க்கை பாதிப்பு ...
Ooty–Mettupalayam Road Blocked After Landslide; Rescue Operations Underway
Ooty–Mettupalayam Road Blocked After Landslide; Rescue Operations UnderwayGoogle
1 min read

தொடர் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு :

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் மேட்டுப்பாளையம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக மலைப்பாதைகளில் மண் மற்றும் பாறைகள் சரிந்து விழுவதுடன், மரங்களும் சாலைகளில் விழுந்துள்ளன.

குறிப்பாக, குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பர்லியார் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதில், ஊட்டியில் இருந்து கோவை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மண்ணில் சிக்கியது.

பேருந்தின் மீது மண் மற்றும் மரங்கள் விழுந்ததால் வாகனம் கடுமையாகச் சேதமடைந்தது.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஓட்டுநர் :

நிலச்சரிவில் சிக்கிய பேருந்துக்குள் இருந்த ஓட்டுநர் ஜனகராஜ் மற்றும் நடத்துநரை மீட்புக் குழுவினர் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

படுகாயமடைந்த ஓட்டுநர் ஜனகராஜ், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடத்துநரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

போக்குவரத்து கடுமையாக பாதிப்பு :

கனமழை காரணமாக குன்னூர்–மேட்டுப்பாளையம் சாலையிலும், கோத்தகிரி–மேட்டுப்பாளையம் சாலையிலும் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் சாலைகளில் மண், பாறைகள் மற்றும் மரங்கள் குவிந்துள்ளன. வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால், நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மண்ணையும் பாறைகளையும் அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலைத் துறையினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை :

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மலைப்பாதைகளில் மேலும் நிலச்சரிவு ஏற்படக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

இதனால் ஊட்டி உள்ளிட்ட நீலகிரி பகுதிகளுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத்தைத் தற்காலிகமாகத் தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

கனமழையால் ஏற்பட்ட இந்த நிலச்சரிவு, மலைப்பாதைகளில் பயணம் செய்வோரின் பாதுகாப்பு குறித்த கவலையை மீண்டும் ஏற்படுத்தியுள்ளது.

===================

logo
Thamizh Alai
www.thamizhalai.in