

மாறிவிட்ட தமிழக அரசியல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியல் கணக்குளை மாற்றி காட்டி இருக்கு. தமிழகம் என்றால் திராவிட கட்சிகள் தான் என நிலைப்பாடு உடைக்கப்பட்டு, தவெக ஆட்சிக்கு வந்துள்ளது.
சிதறிய திமுக கூட்டணி
திராவிட கட்சிகளை மட்டுமே ஆதரித்த பல கட்சிகள் இன்று, தவெக பக்கம் நிற்கின்றன. திமுக கூட்டணி முழுமையாக உடைந்து போய் இருக்கிறது.
ஆறு தொகுதிகளில் இடைத்தேர்தல்
இரு தொகுதிகளில் வென்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் திருச்சி கிழக்கு காலியாக இருக்கிறது.
அதிமுக எம்எல்ஏக்கள் 5 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். எனவே, பெருந்துறை, தாராபுரம், மதுராந்தகம், அம்பாசமுத்திரம், விராலிமலை ஆகிய 5 தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டு, மொத்தம் 6 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது.
கங்கணம் கட்டியுள்ள எதிர்க்கட்சிகள்
இடைத்தேர்தலில் தவெக கூட்ட ணியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் திமுக, ஆளுங்கட்சிக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து பொது வேட்பாளர்களை நிறுத்த ஆலோசித்து வருகிறது.
நாம் தமிழர் கட்சி
சட்டப்பேரவை தேர்தலில் தனித்து களம் கண்ட நாம் தமிழர் கட்சி, அனைத்து இடங்களிலும் தோல்வியைச் சந்தித்ததுடன், வாக்கு வங்கியும் 8 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாகக் குறைந்தது.
காரைக்குடியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் டெபாசிட் இழந்து நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.
அம்பாசமுத்திரம் - சீமான் போட்டி
எனவே, சீமானை ஒரு தொகுதியில் பொது வேட்பாளராக நிறுத்த திமுக உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டு, காய் நகர்த்தி வருகின்றன. அந்த வகையில், அம்பாசமுத்திரம் தொகுதியில் தவெகவை எதிர்கொள்ள, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களம் இறக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
தவெகவில் இசக்கி சுப்பையா
கடந்த தேர்தலில் அம்பாசமுத்திரத்தில் அதிமுக சார்பில் வென்ற இசக்கி சுப்பையா, இரண்டாம் இடம் பிடித்த காங்கிரஸ் வேட்பாளர் மற்றும் மூன்றாம் இடம்பிடித்த தவெக வேட்பாளர் என மூவருமே தற்போது தவெக அணியில் உள்ளனர்.
ஆதரவு தர அதிமுகவும் தயார்!
சீமானை சம்மதிக்க வைக்கும் பொறுப்பு முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியிடமும் திரைமறைவு பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
தவெகவை சமாளிக்க சீமான் தேவை
அம்பாசமுத்திரத்தில் சீமானை வெற்றி பெறச்செய்து சட்டப்பேரவைக்குள் அனுப்பினால், அது முதல்வர் விஜய்க்கும், தவெகவுக்கும் சட்டப்பேரவையில் கடுமையான அரசியல் நெருக்கடியை கொடுக்கும்.
தயாராகும் நாம் தமிழர் கட்சி
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளின் குரல் மேலும் வலுப்பெறும் என திமுக கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவது பற்றி வெளிப்படையாக சீமான் அறிவிக்கா விட்டாலும், நாம் தமிழர் நிச்சயம் போட்டியிடும் என்று கூறி இருக்கிறார்.
=========================