

FCRA சட்டத் திருத்த மசோதா
தொண்டு நிறுவனங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகள் வழங்கப்படுவதை முறைப்படுத்தும் வகையில், வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026-ஐ (FCRA) மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்தது.
தவெகவும் எதிர்ப்பு
நடப்பு கூட்டத்தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன.
தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் தவெக அரசும் இந்த மசோதாவை எதிர்த்து வருகிறது.
சட்டசபையில் தனித்தீர்மானம்
இந்தநிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா 2026-ஐ (FCRA) அதன் தற்போதைய வடிவில் திரும்பப் பெறுமாறு வலியுறுத்தும் தனி தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அமைச்சர் ராஜ்மோகன் தாக்கல்
பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் ராஜ்மோகன் முன்மொழிந்தார். அப்போது பேசியவர், “வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026, தற்போதைய வடிவில், FCRA பதிவு காலாவதியாகுதல், புதுப்பிக்கப்படாமை, புதுப்பிப்பு மறுக்கப்படுதல்...
பதிவு இரத்து அல்லது ஒப்படைக்கப்படுதல் போன்ற தொண்டு நிறுவனங்களின் சொத்துகளை அரசிடம் காரணங்களால் ஒப்படைத்தல், நிர்வகித்தல், மாற்றுதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான விதிகள் குறித்து இம்மன்றம் ஆழ்ந்த கவலை தெரிவிக்கிறது.
தொண்டு நிறுவனங்களை பாதிக்கும்
இவ்விதிகள் தொண்டு நிறுவனங்களின் தன்னாட்சியையும், குறிப்பாக சிறுபான்மையினர் நடத்தும் கல்வி மற்றும் சமூகநல நிறுவனங்களின் செயல்பாடுகளையும் பாதிக்கக்கூடும்.
மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்
எனவே, வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்த மசோதா, 2026-ஐ அதன் தற்போதைய வடிவில் திரும்பப்பெற்று, மாநில அரசுகள், தொண்டு, மத, கல்வி, மருத்துவ மற்றும் சமூக அமைப்புகள் உள்ளிட்ட அனைத்து பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனை நடத்துமாறு ஒன்றிய அரசை இம்மன்றம் வலியுறுத்துகிறது.
கூட்டாட்சிக்கு எதிராக இருக்கக் கூடாது
எந்தவொரு திருத்த மசோதாவும் இயற்கைநீதி, விகிதாசாரம், சொத்துரிமைப் பாதுகாப்பு, நியாயமான எதிர்பார்ப்பு மற்றும் கூட்டாட்சித் தத்துவம் ஆகியவற்றை உறுதிசெய்ய வேண்டும்.
தமிழக அரசு கடும் எதிர்ப்பு
வெளிநாட்டு பங்களிப்புகளில் வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புணர்வுடன், சட்டப்பூர்வமாக செயல்படும் தொண்டு, கல்வி, மருத்துவ, மத, கலாச்சார மற்றும் சமூகநல அமைப்புகளின் உரிமைகளை பாதுகாக்கவேண்டும்.
மத்திய அரசு கொண்டுவந்த FCRA திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபணை தெரிவிக்கிறது” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
அரசியல் கட்சிகள் ஆதரவு
அதனை தொடர்ந்து தனித்தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த தனித்தீர்மானத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட், பாமக, அதிமுக, மஜக, திமுக, விசிக ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.
பாஜக எதிர்ப்பு
தொடர்ந்து FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித் தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு அளிக்கவில்லை. இதனை தொடர்ந்து பேசிய சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் தனித்தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தினார்.
தனித்தீர்மானம் நிறைவேற்றம்
இதில் பாஜகவை தவிர எஞ்சிய கட்சிகளின் முழுமையான ஆதரவுடன் FCRA திருத்த மசோதாவுக்கு எதிரான தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை சபாநாயகர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
===================