

’ஜனநாயகன்’ பாடல் வெளியீட்டு விழா
தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், நடித்துள்ள கடைசி படமான ’ஜனநாயகன்’ பொங்கலுக்கு ரிலீசாகிறது. இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, மலேசியாவில் சிறப்பாக நடைபெற்றது.
மலேசியாவை புகழ்ந்த விஜய்
விழாவில் பேசிய நடிகர் விஜய், “ ''ஐயா ராசா, செல்லங்களா யார்ரா நீங்கலாம், என் நெஞ்சில் குடியிருக்கும்'' என்றார். 'இலங்கைக்கு பிறகு மலேஷியாவில் அதிகமான தமிழ் மக்கள் பார்க்கிறோம்.
மலேஷியாவில் நம்ம நண்பர் அஜித் நடித்த பில்லா படப்பிடிப்பு கூட இங்கே தான் நடந்துள்ளது. எனது காவலன், குருவி படங்களும் இங்கே எடுத்துள்ளனர். இந்த நிகழ்ச்சியை நன்றாக நடத்த உதவிய மலேஷியா அரசுக்கு எனது மனமார்ந்த நன்றி
ரசிகர்கள் எனக்கு கொடுத்தது அதிகம்
சின்ன மண் வீட்டை கட்ட சினிமா வந்தேன், நீங்கள் பங்களா கொடுத்து விட்டீர்கள். கடந்த 30 வருடங்களாக எனது பயணத்தில் ரசிகர்கள் உடன் இருந்தார்கள். அடுத்த 30 வருடத்திற்கு நான் அவர்களுடன் இருக்க விரும்புகிறேன். நன்றி என சொல்றவன் இல்ல.
நன்றிக்கடனை தீர்ப்பேன்
நன்றிக்கடன் தீர்த்து விட்டு தான் போவான் இந்த விஜய். எனக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன். வாழ்க்கையில் ஜெயிக்க நல்ல நண்பர்கள் தேவையில்லை.
பலமான எதிரி அவசியம்
பலமான எதிரி தேவை. பலமான எதிரி தான் உங்களை பலமாக்குவார்கள். நான் முதல் நாளில் இருந்தே விமர்சனங்களை சந்தித்து வருகிறேன். ஆனால் என்னுடன் என்னுடைய ரசிகர்கள் 33 வருடங்களாக நிற்கிறார்கள். எனக்காக நின்றவர்களுக்காக இப்போ நான் நிற்கப் போகிறேன்.
மக்கள் பார்த்துப்பாங்க
சினிமாவில் நீங்கள் விட்டுப் போகும் இடத்தை யாரும் நிரப்ப முடியாது என்று தொகுப்பாளர் கூறிய போது, யார் யாரை எந்த இடத்துல வைக்க வேண்டும் என மக்களுக்கு தெரியும். அவங்க பார்த்துப்பாங்க என்றார்.
சஸ்பென்சில் தான் ”கிக்”
''விஜய் தனியா வருவாரா.. அணியா வருவாரா.. என்று அடிக்கடி கேட்கிறார்கள். நாம் எப்போது தனியாக வந்தோம். 33 ஆண்டுகளாக அணியாகத்தானே வந்திருக்கிறோம். இப்போதுகூட விளக்கம் போதவில்லை என்று சொல்வார்கள். ஆனால் சஸ்பென்சில்தான் 'கிக்' இருக்கும்.
2026ல் வரலாறு மாறும்
ஆகவே, 2026ல் வரலாறு மீண்டும் நிகழப்போகிறது; மக்களுக்காக அதை வரவேற்க நாம் தயாராக இருப்போம். இவ்வாறு விஜய் பேசினார்.
விஜய் சொன்ன குட்டிக்கதை
'' நான் உங்களுக்கு ஒரு குட்டிக்கதை சொல்கிறேன். ஒரு ஆட்டோக்காரர் ஒரு கர்ப்பிணியை ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அப்போது பயங்கர மழை பெய்ய, ஆட்டோக்காரர் அந்த பெண்ணிடம் குடையை கொடுத்து பார்த்து போ என்று சொல்கிறார்.
சின்ன உதவிகள் பேருதவியாக மாறும்
அதற்கு அந்த பெண், இந்த குடையை நான் எப்படி உங்களுக்கு கொடுப்பது எனக் கேட்க, அவர் சிரித்துவிட்டு வேறு யாராவது தேவைப்படுவோருக்கு கொடுங்கள் என சொல்லி சென்றுவிட்டார். மருத்துவமனை வாசலில் இருந்த பெரியவர் மழைக்கு பயந்து அமர்ந்திருக்கிறார். அவருக்கு இந்தப் பெண் குடையை கொடுக்க அவரும் எப்படி உங்களுக்கு திருப்பி கொடுப்பது என்று கேட்க, அந்தப் பெண்ணும் தேவைபடுவோர்களுக்கு கொடுங்க என்கிறார்.
அந்த பெரியவர் பஸ்சில் ஏறும்போது, அங்கிருந்த பூக்கார அம்மாவுக்கு குடையை கொடுக்கிறார். கடைசியாக அந்தக் குடை ஒரு பள்ளிச் சிறுமியிடம் செல்கிறது. அந்த சிறுமியை அழைத்து செல்ல அவரின் தந்தை வருகிறார். மழையில் மகளை அழைத்து வர அவரிடம் குடை இல்லை. ஆனால் அந்த மகள் குடையுடன் வருகிறார். அந்த அப்பா வேறு யாரும் இல்லை, அந்த ஆட்டோக்காரர் தான்.
அதாவது அந்த குடை அவர் கொடுத்த குடை தான். இந்தக் கதையின் நீதி முடிந்த வரை எல்லோருக்கும் சின்ன சின்ன உதவி செய்யுங்கள் வாழ்க்கை சுவாரஸ்யமாக அமையும். வெள்ளத்தில் தவிப்பவருக்கு படகு கொடுத்தால், நீங்கள் பாலைவனத்தில் தவிக்கும் போது அது ஒட்டகமாக திரும்ப வரும்.
மன்னித்தால் வாழ்நாள் நிம்மதி
உங்களுக்கு கெடுதல் செய்வாரையோ பழி வாங்கினால் அந்த நாள் மட்டுமே நீங்கள் மகிழ்வீர்கள். அவரை மன்னித்தால் வாழ்நாள் முழுக்க நிம்மதி இருப்பீர்கள். யாரையும் கஷ்டப்படுத்த இல்லை இந்த வாழ்க்கை. முடிந்த வரை நல்லது செய்யுங்கள். அது வரும்காலத்தில் உங்களுக்கு கைகொடுக்கும். பிடித்திருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் ப்ரீயாய் விடுங்கள். என்ற குட்டிக்கதை ஒன்றை விஜய் கூறினார்.
===========