

சென்னையில் பியூஷ் கோயல்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜகவின் தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டார். இந்தநிலையில், இன்று சென்னை வந்த அவர், கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
அதிமுக - பாஜக பேச்சுவார்த்தை
அதன் பின்னர், சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் பியூஷ் கோயல், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த ஆலோசனை நீடித்தது.
எடப்பாடி பழனிசாமி - பியூஷ் கோயல்
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக பாஜக தேர்தல் இணை பொறுப்பாளர் அர்ஜுன் ராம் மெக்வால், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, திண்டுக்கல் சீனிவாசன், கே.பி முனுசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தையின் போது உடனிருந்தனர்.
சுமூகமான பேச்சுவார்த்தை
முதற்கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு நடைபெற்றதாக அவர் குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியும், பியூஷ் கோயலும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
நண்பர் எடப்பாடி - பியூஷ் கோயல்
நண்பர் மற்றும் சகோதரர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு பேசிய பியூஷ் கோயல், அவரை சந்தித்ததில் மகிழ்ச்சி என்றார். இன்றைய சந்திப்பில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடைபெற்றன. 2026 தேர்தலை ஒரு குடும்பமாக எதிர்கொள்ள உள்ளோம்
2026ல் என்டிஏ ஆட்சி
தமிழ்நாட்டின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் இளைஞர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் என்டிஏ ஆட்சி. எடப்பாடி தலைமையில் தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைப்போம்
என்டிஏ வெற்றி உறுதி
பிரதமர் மோடியின், தலைமையின் வழிகாட்டுதலில் தேசிய ஜனநாயக கூட்டணி மாபெரும் வெற்றியை பெறும் என்று பியூஷ் கோயல் தெரிவித்தார்.
திமுக மீது மக்கள் கோபம்
சட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, கூட்டணிக் கட்சிகள் எப்படி இணைந்து செயல்பட வேண்டும் என்று கருத்துகளை பரிமாறிக் கொண்டோம்.
திமுக ஆட்சியை அகற்றுவதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். அதிமுக பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று 2026ல் ஆட்சி அமைக்கும், என்று உறுதிபடக் கூறினார்.
================