

பிரதமர் மோடி உரையில் உத்தரமேரூர்
PM Narendra Modi on Uttiramerur is Part of Cholar History : அயோத்தி ராமர் கோவிலில் கட்டுமான பணிகள் நிறைவு பெற்றதை குறிக்கும் வகையில், கோபுரத்தில் கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கிராமமான உத்தரமேரூர் பற்றி குறிப்பிட்டார். அயோத்தி விழாவில் உத்தரமேரூரை சொல்வதற்கு காரணம் என்ன? அயோத்திக்கும் - உத்தரமேரூருக்கும் தொடர்பு என்ன ? பின்னனி சிறப்பு பற்றி பார்க்கலாம்.
மக்களாட்சியின் அடிநாதம் உத்தரமேரூர்
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உலகில் முதன்முறையாகச் சிறந்த மக்களாட்சி (ஜனநாயகம்) முறையை நடத்தி வெற்றி கண்ட பெருமையை தாங்கி நிற்பதுதான் உத்தரமேரூர். அதிலும், இப்போதிருக்கும் தேர்தல் முறையை போலவே, வேட்பாளருக்கான தகுதிகள், தகுதியற்றவர்கள் யார், பதவிக் காலம் எவ்வளவு போன்ற பல விதிமுறைகளைச் சட்டம் போல் வகுத்து, அதைத் தீவிரமாக அமுல்படுத்தியது உத்திரமேரூர் கிராமம். இன்று நாம் கொண்டாடும் மக்களாட்சியின் அடிப்படை விதிகளை, சோழர்கள் ஒரு கல்வெட்டில் தெளிவாக பதித்து, பின்பற்றினர்.
உத்தரமேரூர் கல்வெட்டுகள்
உத்திரமேரூர் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு அருகில் இருக்கும் ஒரு தொன்மையான கிராமமாகும். இங்குள்ள வைகுண்டப் பெருமாள் கோவில் சுவர்களில், முதலாம் பராந்தக சோழனின் ஆட்சிக்காலத்தில் (கி.பி. 919-923 காலகட்டம்) பொறிக்கப்பட்ட சிறப்புமிக்க கல்வெட்டுகள் உள்ளன.
குடவோலை தேர்தல் முறை
அந்தக் காலத்தில் கிராமத்தின் உள்ளாட்சி நிர்வாக உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்பட்ட "குடவோலைத் தேர்தல் முறை" பற்றி விரிவாக விளக்குகின்றன. தேர்தல் ஆணையம், விதிகள், சட்டங்கள் எதுவுமே இல்லாத காலத்தில், சாமான்ய கிராம மக்கள் தங்கள் பிரதிநிதிகளை எவ்வளவு நேர்மையாகவும், கடுமையான விதிமுறைகளுடனும் தேர்ந்தெடுத்தார்கள் என்பதை கல்வெட்டுகள் பறைசாற்றுகின்றன.
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தகுதிகள்;
1. கால்வேலி அளவுக்காவது சொந்த நிலம் இருக்க வேண்டும்.
2. சொந்த மனை, வீடு இருக்க வேண்டும்.
3. வயது முப்பத்தைந்துக்கும் எழுபதுக்கும் இடையில் இருக்க வேண்டும்.
4. வேதங்கள், மந்திரங்கள், சாத்திரங்கள் ஆகியவற்றில் நன்கு பேசும் புலமை வேண்டும்.
இவை அன்றைய தேர்தலில் நிற்பதற்கான முக்கியமான தகுதிகளாக இருந்தன. இந்தக் கடுமையான தகுதிகளால் நிர்வாகம் சிறப்பாக இருந்தது.
தேர்தலில் நிற்க தகுதியில்லை - விதிகள்
1. பதவி வகித்த பின்னால் கணக்கு வழக்குகளைச் சரியாகச் சமர்ப்பிக்காதவர்கள்.
2. பிறர் மனைவியுடன் தவறிழைத்தவர்கள்,.
3. பெரிய பாவங்களான கொலை அல்லது திருட்டுச் செய்தவர்கள்.
4. பொய் உரைப்பவர்கள், கள் குடித்தவர்கள், தேர்தலில் போட்டியிட தகுதியற்றவர்கள்.
தேர்தலில் நேர்மையைப் பற்றி இப்போது நாம்பேசுகிறோம். ஆனால், ஆயிரம் ஆண்டுகளுக்கு நம் முன்னோர்கள் தவறு செய்தவர்கள் மற்றும் அவரது உறவினர்கள் கூட தேர்தலில் போட்டியிட கூடாது என்பதில், உறுதியாக இருந்து, விதிகளை வகுத்து இருக்கிறார்கள்.
குடவோலை முறை தேர்தல்
குடவோலை முறை எப்படி செயல்பட்டது என்றால், கிராமம் 30 சிறு பகுதிகளாக பிரிக்கப்பட்டது. ஒவ்வொரு பகுதியிலும் தகுதியான வேட்பாளர்களின் பெயர்களைப் பனை ஓலைகளில் எழுதுவார்கள். பிறகு அவற்றை ஒரு பானைக்குள் போட்டு, ஒரு சிறுவனைஅழைத்து ஓலையை எடுக்கச் சொல்வார்கள்.
அந்த ஓலையில் யாருடைய பெயர் இருக்கிறதோ, அவர்தான் கிராமத்தின் நிர்வாக சபை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்படுவார். குடத்தில் ஓலையைப் போட்டுத் தேர்ந்தெடுத்ததால், இது "குடவோலை முறை" என்று பெயர் பெற்றது.
ஓராண்டு மட்டுமே பதவி
இந்தச் சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஓராண்டு மட்டும்தான். பதவி முடிந்த பிறகு, அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் மீண்டும் போட்டியிட முடியாது என்ற கட்டுப்பாடும் இருந்தது. இதன்மூலம், அதிகாரத்தைத் தொடர்ச்சியாக ஒருவர் மட்டுமே அனுபவிப்பதைத் தவிர்க்கப்பட்டு, தகுதியான அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
கிராம நிர்வாகத்தை கவனிக்கும்
இந்தச் சபை, ஏரி வாரியம், தோட்ட வாரியம், பொன் வாரியம் போன்ற பல சிறு குழுக்களாகப் பிரிந்து, கிராமத்தின் நீர்ப்பாசனம், நில நிர்வாகம், கோவில்களின் பராமரிப்பு, வரவு செலவு போன்ற அனைத்து வேலைகளையும் நிர்வகித்தது.
ஜனநாயகத்தின் ஆணிவேர் இந்தியா
எனவேதான், பிரதமர் மோடி அயோத்தியில் இராமன் கோவிலின் கொடியை ஏற்றி வைத்தபோது, தமிழ்நாட்டின் உத்திரமேரூரைப் பற்றி சிலாகித்து பேசினார். ஜனநாயக பாரம்பரியம் என்பது இந்தியாவிற்கு புதிது கிடையாது.
உரக்கச் சொன்ன பிரதமர்
அது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழைமையானது என்றும், உலகிலேயே மிக நேர்மையான, ஒழுக்கமான மக்களாட்சித் தத்துவத்தை நடைமுறைப்படுத்திய முன்னோடிகள் தமிழர்கள்தான் என்பதையும் உரக்க சொல்லவே உத்திரமேரூர் கல்வெட்டுகளை பற்றி பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார்.
====================================