

பாமகவில் உச்சக்கட்ட மோதல்
PMK and the mango symbol are in the hands of Anbumani information has emerged that a new party called Ayya PMK has been launched by Ramadoss : பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே உச்சக்கட்ட மோதல் போக்கு நிலவி வருகிறது. தந்தை, மகனுக்கு இடையே நிலவி வரும் பிரச்னையால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர்.
அன்புமணி கையில் மாம்பழம்
கட்சியில் பெரும்பாலானோர் அன்புமணி ஆதரவாக இருப்பதால், அவரது கை ஓங்கி உள்ளது. இதனை பயன்படுத்தி முன்கூட்டியே அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்தார். கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணி கட்டுப்பாட்டி இருப்பதால், ராமதாஸ் தரப்பினர் என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர்.
“அய்யா பாட்டாளி மக்கள் கட்சி”
ராமதாஸ் அணியில் கட்சியின் தலைமை நிலைய செயலாளராக இருக்கும் அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற புதிய கட்சி உருவாகியுள்ளது.
ராமதாஸ் முகத்துடன் கொடி
பாமகவின் பெயர், வண்ணம், கொடி ஆகியவற்றை பிரதிபலிக்க கூடிய வகையில், ஏற்கெனவே இருக்கும் பாமக கொடியில் ராமதாஸின் முகத்தை மட்டும் பதித்து புதிதாக கொடியும் உருவாக்கப்பட்டுள்ளது.
அன்புமணிக்கு எதிராக...
தேர்தலில் பாமக சார்பில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக, வேட்பாளர்களை நிறுத்துவதற்காக அய்யா பாமக என்ற புதிய கட்சி தொடங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ராமதாஸ் தரப்பு மழுப்பல்
இதுபற்றி கருத்து தெரிவித்த ராமதாஸ் தரப்பு, “அய்யா பாமக என்ற புதிய கட்சி பற்றி எதுவும் தெரியாது. நாங்கள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம்” என்று மழுப்பலாக பதிலளிக்கின்றனர்.
அன்புமணி தரப்பு பதிலடி
கட்சியும், மாம்பழம் சின்னமும் அன்புமணியிடம் உள்ளது. அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அதனால், தேர்தலில் எங்களுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்துவதற்காக புதிய கட்சியை தொடங்கியுள்ளனர் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டுகின்றனர்.
பின்னணியில் திமுக!
இதன் பின்னணியில் திமுகவின் சதி இருப்பதாகவும், புதிய கட்சி மூலம் வன்னிய சமுதாய மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுங்கட்சி சதி செய்வதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அன்புமணிக்கு செக் வைக்கும் திமுக
ஆனால், புதிய கட்சிக்கு கொடுத்த முகவரிக்கு சரியான ஆவணம் சமர்ப்பிக்காததால், தேர்தல் ஆணையம் கட்சியை பதிவு செய்ய மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
ஆட்சியை கடுமையாக விமர்சித்து வரும் அன்புமணிக்கு செக் வைக்கும் வகையில், திமுக ராமதாசை பயன்படுத்த தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.
===================