

பாட்டாளி மக்கள் கட்சி
PMK Founder Ramadoss Praised CM MK Stalin Rule : பாட்டாளி மக்கள் கட்சியின் தந்தை - மகன் இடையேயான மோதல், வெட்ட வெளிச்சமாக, கட்சி இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இருவரும் தாங்கள்தான் உண்மையான பாமக என்று வரிந்து கட்டுகின்றனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில், சட்டமன்ற தேர்தலில் பாமகவின் மாம்பழ சின்னம் யாருக்கு கிடைக்கும்? அல்லது சின்னம் முடக்கப்படுமா என்ற சந்தேகமும் நிலவுகிறது.
அதிமுக கூட்டணியில் அன்புமணி
இந்தநிலையில் அன்புமணி தலைமையிலான பாமக தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்று, அதிமுக தலைமையிலான கூட்டணி மூலம் தேர்தலை சந்திக்கிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சில தினங்களுக்கு முன்பு சந்தித்த அன்புமணி, கூட்டணியை இறுதி செய்து விட்டார்.
ராமதாஸ் கடும் எதிர்ப்பு
இதற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, பாமக கூட்டணி குறித்து பேச அன்புமணி யார்? அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். பாமகவில் முடிவு எடுக்கும் அதிகாரம் எனக்கு மட்டுமே உள்ளது என ஆவேசத்துடன் குறிப்பிட்டார்.
அரசியலில் எதுவும் நடக்கலாம்
இந்தநிலையில், தைலாபுரத்தில் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். விசிக தலைவர் திருமாவளவன் இருக்கும் கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, "அரசியலில் எதுவும் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் நடக்கும், எதிர்பார்க்காதவை கூட நிகழும். எதுவும் நடக்காது” எனச் சொல்ல முடியாது" என்று ராமதாஸ் பதிலளித்தார்.
தேர்தலில் ஸ்ரீகாந்தி போட்டி
சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீகாந்தி பாமக சார்பில் போட்டியிடுவார் என்பதை ராமதாஸ் உறுதிப்படுத்தினார். தேவைப்பட்டால் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆட்சியில் பங்கு - அமெரிக்காவிடம் கேட்போம்
"ஆட்சியில் பங்கு கேட்பீர்களா?" என்ற செய்தியாளர்களின் கேள்விக்குத் தனது பாணியில் பதிலளித்த ராமதாஸ், "நாங்கள் இங்கு (தமிழகத்தில்) கேட்க மாட்டோம், அமெரிக்க அதிபரிடம் கேட்போம்" என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.
ஆட்சியில் பங்கு - விருப்பம் இல்லை
"கடந்த காலங்களில் ஆட்சியில் பங்கு கேட்கும் வாய்ப்பு இருந்தபோதும் நாங்கள் அதனை வேண்டாம் என்றே கூறினோம். கலைஞர் ஆட்சியில் ஐந்து ஆண்டுகள் நிபந்தனையற்ற ஆதரவு அளித்தோம்.
அப்போது காங்கிரஸிற்கு ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற விருப்பம் இருந்தது, ஆனால் எனக்கு அந்த விருப்பம் இல்லை" என்று ராமதாஸ் நினைவுகூர்ந்தார்.
அன்புமணியை எடப்பாடி ஏன் அழைத்தார்?
கூட்டணி குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், தற்போது வரை எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றார். "எடப்பாடி பழனிசாமி ஏன் அன்புமணி ராமதாஸை அழைத்தார் என்று எனக்குத் தெரியாது. உங்களுக்குத் தெரிந்தால் சொல்லுங்கள்" என்று ராமதாஸ் பதிலளித்தார்.
தவெகவுடன் கூட்டணியா? ராமதாஸ் நழுவல்
தவெக உடன் கூட்டணியா?" என்ற கேள்விக்கு, "உங்கள் கற்பனைக்கு நான் தீனி போட முடியாது. காலமும் நேரமும் வரும்போது உங்களுக்குப் பதில் கிடைக்கும்" என்றார்.
திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான நான்கு ஆண்டு கால ஆட்சி குறித்துப் பேசிய ராமதாஸ், "நான்காண்டு கால ஸ்டாலின் ஆட்சி எல்லாம் நன்றாகத் தான் உள்ளது" என்று பாராட்டுத் தெரிவித்தார்.
==================