

பாமக பொதுக்குழு, செயற்குழு
PMK MLA Arul Speech about Anbumani in Salem Meeting : சேலத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவை நடத்த அன்புமணி தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி அன்புமணி தரப்பு காவல் துறையை நாடியது. இந்நிலையில் சுமார் 5000 தொண்டர்கள் கலந்து கொண்ட கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் திட்டமிட்டபடி நடைபெற்றது.
தலைவருக்கு உதாரணம் ராமதாஸ் தான்
இக்கூட்டத்தில் சேலம் சட்டமன்ற உறுப்பினர் அருள் பேசுகையில், “ஒரு கட்சியின் தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் ஐயா ராமதாஸ், அதே போன்று ஒரு தலைவர் எப்படி இருக்கக் கூடாது என்பதற்கும் உதாரணம் பாமக தான்.
46 ஆண்டுகள் பொதுவாழ்க்கை
இந்த நாட்டை ஐயா ராமதாஸ் அவர்கள் எப்படி நேசித்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். 46 ஆண்டுகள், சுமார் அரை நூற்றாண்டு காலம் தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் தேவைக்காகவே அர்ப்பணித்து ஒரு போராளியாகவே வாழ்ந்தவர்.
மன உளைச்சலில் ராமதாஸ்
ஆனால் அப்படிப்பட்ட ஐயா கடந்த 2, 3 ஆண்டுகளாக கடுமையான மன உளைச்சலில் இருக்கிறார். இந்த சூழலுக்கு தொண்டர்கள் காரணமா? பொறுப்பாளர்கள் காரணமா? ஐயா அவர்கள் முடிவெடுக்கும் இடத்தில் இருந்த வரையில் பாமக அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்தது. ஐயா சொல்வதை அனைவரும் கேட்டார்கள்.
சிறிய கூட்டத்தால் சிக்கல்
ஆனால் அந்த நிலையை மாற்றுவதற்கு சிறிய கூட்டம் ஒன்று செயல்படுகிறது. இந்த நிலைக்கு யார் காரணம்? 36 வயதில் உங்களை மத்திய அமைச்சராகவும், நாடாளுமன்ற உறுப்பினராகவும் உருவாக்கி அழகுபார்த்தாரே. அவரை கடந்த 3 ஆண்டுகளாக படாத பாடு படுத்துகிறீர்களே!.
ஐயாவால் அன்புமணிக்கு பதவிகள்
சாதாரணமாக தந்தை என்பவர் ரத்தத்தையும், சதையையும் தான் கொடுப்பார். ஆனால் ஐயா உங்களுக்கு எப்படிப்பட்ட பதவிகளையெல்லாம் வழங்கினார். இதுவரை நான் கிட்டத்தட்ட 18 முறை சிறை சென்றுள்ளேன்.
அன்புமணி சிறை சென்றாரா?
ஆனால் உங்கள் மீது சிறிய அடிதடி வழக்கு உள்ளதா? என்றாவது சிறை சென்றதுண்டா? அப்படிப்பட்ட உங்களுக்கு பல்வேறு பதவிகளை வழங்கி அழகுபார்த்த தந்தையை இப்படித் தான் நடத்துவீர்களா?
அன்புமணி பூஜ்ஜியமாகி விடுவார்
வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் அன்புமணி பூஜ்ஜியமாகி விடுவார்” என்றுஎம்எல்ஏ அருள் மிகவும் காட்டமாக விமர்சித்தார். பாமக பொதுக்குழுவில் பேசிய அனைவரும் அன்புமணியை விமர்சித்து பேசினர்
=============