காவல்துறை அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? : அன்புமணி கண்டனம்

Anbumani Ramaodss on DSP Sundaresan : கள்ளச்சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுத்த காவல் அதிகாரியை திட்டமிட்டு அவமதிப்பதா? என்று, திமுக அரசுக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
PMK Leader Anbumani Ramaodss on Mayiladuthurai DSP Sundaresan
PMK Leader Anbumani Ramaodss on Mayiladuthurai DSP Sundaresan
2 min read

காவல்துறை அதிகாரியை அவமதிப்பதா? :

Anbumani Ramaodss on DSP Sundaresan : இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மயிலாடுதுறை மாவட்டத்தில் மது மற்றும் போதை வணிகத்துக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனுக்கு வழங்கப்பட்ட காரை பறித்து, வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து செல்லும் நிலையை காவல்துறை ஏற்படுத்தியுள்ளது. நேர்மையாகவும், கடமை உணர்வுடனும் செயல்பட்டதற்காக ஒரு காவல் அதிகாரியின் வாகனத்தைப் பறித்து அவமானப்படுத்துவது கண்டிக்கத்தக்கது.

பணியில் அதிரடி காட்டிய டிஎஸ்பி :

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் மதுவிலக்குப் பிரிவு துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்ட சுந்தரேசன்(DSP Sundaresan), விதிகளை மீறி செயல்பட்டதாக இதுவரை 23 பார்களை மூடி முத்திரையிட்டுள்ளார். கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக 1200க்கும் கூடுதலான வழக்குகளை பதிவு செய்திருக்கும் சுந்தரேசன் 700-க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறைகளிலும் அடைத்துள்ளார்.

பழிவாங்கும் நடவடிக்கை சரியா? :

காவல்துறை உயரதிகாரிகள், ஆளும்கட்சி நிர்வாகிகளின் பரிந்துரையையும் மீறி மது வணிகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால் அதற்கு பழிவாங்கும் வகையில்தான் அவர் மீது இத்தகைய பழிவாங்கல்களை மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை கட்டவிழ்த்து விட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசு வேடிக்கை பார்க்கிறது :

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறையின் இந்த அத்துமீறலையும், அதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதையும் அனுமதிக்க முடியாது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை தலைவிரித்தாடியது. இது தொடர்பாக, காவல்துறைக்கு தகவல் கொடுத்ததற்காக, மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் கடந்த பிப்ரவரி மாதம் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டனர். சுந்தரேசன் பொறுப்பேற்ற பின்புதான் கள்ளச்சாராய வணிகமும் அரசு மதுக்கடைகளுடன் இணைக்கப்பட்ட பார்களில் சட்டவிரோத மது விற்பனையும் குறைந்திருக்கிறது.

மேலும் படிக்க : காவல் அதிகாரியை அவமானப்படுத்துவதா? : அண்ணாமலை கண்டனம்

அரசு தரப்பில் இருந்தே அழுத்தம் :

சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று தமிழக அரசுத் தரப்பில் இருந்தே அவருக்கு அழுத்தங்கள் தரப்பட்டதாகவும், அதற்குப் பணியாததால்தான் பணியில் இருக்கும் போதே அவரது வாகனம் பறிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. கையூட்டு வாங்கிக் கொண்டு மது வணிகத்தை கண்டும் காணாமலும் இருக்கும்படி காவல் உயரதிகாரிகள் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதை ஏற்க மறுத்ததால் தான் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் தூண்டுதலின் அடிப்படையில் தாம் பழிவாங்கப்படுவதாகவும் காவல் துணைக் கண்காணிப்பாளர் சுந்தரேசனே குற்றம்சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

நேர்மையான அதிகாரியை பழிவாங்குவதா? :

கள்ளச்சாராய வணிகத்தையும், சட்டவிரோத மது விற்பனையையும் தடுக்கத் தவறியவர்கள் மீதுதான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஆனால், அவற்றை தடுத்து நிறுத்திய ஓர் நேர்மையான காவல் அதிகாரி பழிவாங்கப்படுவது இதுதான் முதல்முறை. இதையெல்லாம் பார்க்கும் போது, தமிழ்நாட்டில் நடப்பது மக்களாட்சியா? அல்லது மதுவின் ஆட்சியா? என்ற வினாதான் எழுகிறது.

உரிய நடவடிக்கை உடனே அவசியம் :

காவல்துறையில் தான் எவ்வாறு பழிவாங்கப்பட்டேன்? உளவுத்துறை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்குத்துறையில் உள்ள உயரதிகாரிகள் எப்படியெல்லாம் தம்மை தொடர்ந்து பழிவாங்கினார்கள் என்பது தொடர்பாக மூத்த அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு சுந்தரேசன்(DSP Sundaresan) குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும்” இவ்வாறு அன்புமணி கேட்டுக் கொண்டுள்ளார்.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in