
நள்ளிரவு கைது, அராஜகம் :
Anbumani Condemns DMK Government : சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டது பற்றி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி, “ சென்னையில் ராயபுரம், திருவிக நகர் ஆகிய மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாருக்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வலியுறுத்தியும் சென்னை மாநாகராட்சி அலுவலகத்திற்கு அருகில் அறவழியில் போராட்டம் நடத்தி வந்த தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினரைக் கொண்டு நள்ளிரவில் கைது செய்து தமிழக அரசு அப்புறப்படுத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. உரிமை கேட்டு போராடுபவர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவது கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது.
அரசு நினைத்திருந்தால் தீர்வு கண்டிருக்கலாம் :
தமிழக அரசு நினைத்திருந்தால் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்திற்கு முதல் நாளிலேயே தீர்வு கண்டிருக்க முடியும். சென்னை மாநகரில் குப்பை அகற்றும் பணியை மாநகராட்சியே மேற்கொள்ள வேண்டும், தங்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்பது தான் அவர்களின் கோரிக்கை. இதை நிறைவேற்றுவதில் அரசுக்கு எந்த சிக்கலும் இல்லை. இன்னும் கேட்டால் குப்பை அகற்றும் தனியார் நிறுவனத்திற்கு தரும் தொகையில் தூய்மைப்பணிகளை இன்னும் சிறப்பாக செய்ய முடிவதுடன், அவர்களுக்கு கூடுதல் ஊதியமும் வழங்கமுடியும். ஆனால், அதைச் செய்ய அரசுக்கு மனமில்லை.
முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கலாம் :
போராட்டக் குழுவினரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைத்து பேசியிருக்க வேண்டும்; அவ்வாறு பேசியிருந்தால் இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைத்திருக்கக் கூடும். ஆனால், முதலமைச்சருக்கோ திரைப்படங்களைப் பார்ப்பதற்கே பொழுதுகள் போதவில்லை. ஒருவேளை சமூகநீதியில் சிறந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் தூய்மைப் பணியாளர்களை சந்தித்துப் பேசுவது தமக்கு தகுதி குறைவு என்று நினைத்து விட்டாரோ என்னவோ?
அடக்குமுறை கோழைத்தனமான செயல் :
ஒன்று மட்டும் உறுதி. ஏழை எளிய மக்களான தூய்மைப் பணியாளர்களை அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டு அகற்றுவது வீரம் அல்ல… கோழைத்தனம். அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தான் வீரம் ஆகும். அதை செய்யாமல் அடக்குமுறையை ஏவி அவர்களை அகற்றிய திமுக அரசை தமிழ்நாட்டு மக்கள் அகற்றும் நாள் வெகுதொலைவில் இல்லை”. இவ்வாறு தனது பதிவில் அன்புமணி எச்சரித்துள்ளார்.
-----