

அன்புமணி ராமதாஸ் அறிக்கை
Anbumani on Vanniyar Caste Reservation : பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் திமுக ஆட்சியில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு மறுக்கப்பட்டதால், பல ஆண்டுகளாக போராடியும் அரசு வேலை கிடைக்காததால் ஏற்பட்ட விரக்தி மற்றும் மன உளைச்சலால் திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
இட ஒதுக்கீடு வழங்கவில்லை
உச்ச நீதிமன்றம் ஆணையிட்டு 1405 நாள்களாகியும் வன்னியர் இட ஒதுக்கீடு வழங்காமல் திமுக செய்த துரோகம் தான் ஒரு ஏழை பட்டதாரியை பலி வாங்கியுள்ளது.
திமுகவின் இந்த துரோகத்தை வன்னிய சமுதாயம் மன்னிக்காது என்று பதிவிட்டுள்ளார்.
டைரியில் 20 பக்கங்கள் எழுதிவிட்டு தற்கொலை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்ற இளைஞர் 2018&ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை முடித்து விட்டு, கடந்த 7 ஆண்டுகளாக அரசு வேலைக்காக போட்டித் தேர்வுகளை எழுதி வந்திருக்கிறார்.
எட்டாக் கனியான அரசு வேலை
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட பல ஆள்தேர்வு அமைப்புகள் நடத்திய போட்டித் தேர்வுகளில் பங்கேற்ற போதும் அவருக்கு அரசு வேலை எட்டாக் கனியாகவே இருந்தது.
மன உளைச்சலால் தற்கொலை
அதனால் மன உளைச்சல் அடைந்த விஜயகுமார் நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காதது தான் தமது தற்கொலைக்கு காரணம் என்றும், வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் தமது டைரியில் 20 பக்கங்களில் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
குடும்பத்திற்கு அழுத்தம் கொடுக்கும் திமுக
சமூகநீதி கிடைக்காமல் ஓர் இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. வேதனையில் மூழ்கியுள்ள அவரது குடும்பத்தினரை ஆறுதல்படுத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன்.
சமூகநீதி மறுப்பு
வன்னியர்களுக்கான சமூகநீதியை மறுப்பதன் மூலம் பட்டதாரி இளைஞர் விஜயகுமாரை தற்கொலைக்கு தூண்டிய திமுக அரசு, அவரது தற்கொலையை திசை திருப்பும் நோக்கத்துடன், ‘‘வன்னியர் இடஒதுக்கீடு கிடைக்காததால் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ளவில்லை.
குடும்பப் பிரச்சினை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டார்’’ என்று கூறும்படி திமுகவைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
தற்கொலை செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டு உரிமையை மறுப்பதன் மூலம் கோடிக்கணக்கான இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கி வரும் மு.க.ஸ்டாலின் அரசு, திமுக செய்த துரோகத்தால் தான் அந்த இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டார் என்ற உண்மையைக் கூட மூடி மறைக்க முயல்வதிலிருந்தே வன்னியர்கள் மீது திமுக எந்த அளவுக்கு வன்மம் கொண்டிருக்கிறது என்பதை உணரலாம்.
வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை திமுக அரசு பாதுகாத்திருந்தாலோ அல்லது உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியவாறு தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றி இருந்தாலோ அப்பாவி இளைஞர் விஜயகுமார் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டிருக்காது.
சமூக அநீதியில் ஊறித் திளைக்கும் திமுக அரசு
ஆனால், வன்னியர்களுக்கு அடுத்தடுத்து இரு துரோகங்களை செய்து அவர்களின் சமூகநீதி உரிமையை பறித்த திமுக அரசு தான் பட்டதாரி இளைஞர் விஜயகுமாரின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும்.
வன்னியர் இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் கடந்த 31.03.2022ஆம் நாள் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், உரிய தரவுகளைத் திரட்டி வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கலாம் என்று ஆணையிட்டது. உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து இன்றுடன் 1405 நாள்களாகிவிட்டன.
தீர்ப்பை மதிக்கவில்லை
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து பரிந்துரை அளிக்கும்படி தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட்டு இன்றுடன் 1118 நாள்களாகி விட்டன.
ஆனால், சமூக அநீதியில் ஊறித் திளைக்கும் திமுக அரசு வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்காமல் துரோகம் செய்து வருகிறது.
திமுக அரசு செய்த சமூக அநீதி மற்றும் துரோகம் காரணமாக பட்டதாரி இளைஞர் புதுப்பாளையம் விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.
திமுகவை வீழ்த்தப்போவது உறுதி
ஆனால், இன்னும் பல லட்சம் வன்னிய இளைஞர்கள் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் விஜயகுமாரின் மனநிலையில் தான் உள்ளனர்.
விஜயகுமாரின் ஆன்மாவும், திமுக அரசின் துரோகத்தால் பாதிக்கப்பட்ட வன்னிய மக்களின் மனங்களும் திமுகவை மன்னிக்காது. அவர்களின் சாபம் வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வீழ்த்தப்போவது உறுதி.
சமூக நிலையிலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்பிலும் காலம் காலமாக மிக மிக பின்தங்கிய நிலையில் உள்ள வன்னிய மக்களுக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு இணையான உள் இடஒதுக்கீட்டை வென்றெடுக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.
எனவே, வன்னிய சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தற்கொலை போன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டு வெளியிட்டுள்ளார்.