Chennai IIT : அரசுப் பள்ளி மாணவர்கள்? : திமுக அரசுக்கு கேள்வி
மாணவர் சேர்க்கை, அமைச்சர் அறிவிப்பு :
Anbumani Ramadoss on DMK Government : இது தொடர்பாக அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், “தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் ‘அனைவருக்கும் ஐஐடி’ என்ற திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்கள் 28 பேர் சென்னை ஐஐடி(Madras IIT) கல்வி நிறுவனத்தில் இணைந்திருப்பதாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்திருக்கிறார்.
திமுக அரசின் மோசடி அறிவிப்பு :
திராவிட மாடல் அரசு முழுக்க முழுக்க பொய்யான, மோசடியான அறிவிப்புகளை வெளியிட்டு தமிழ்நாட்டு மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றி வருகிறது என்பதற்கு அமைச்சரின் இந்த அறிவிப்பு எடுத்துக்காட்டு. அரசுப் பள்ளிகளிலிருந்து 28 மாணவர்கள், அதுவும் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது இன்ப அதிர்ச்சியை அளித்தது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில், திமுக அரசு வெளியிட்டது திரிக்கப்பட்ட தகவல் என்பது உறுதியானதால் அந்த மகிழ்ச்சி மறைந்து போனது.
போட்டி தேர்வு மூலமே வாய்ப்பு :
ஐஐடிகளுக்கான மாணவர் சேர்க்கை ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (முதன்மை), ஐஐடி கூட்டு நுழைவுத் தேர்வு (உயர்நிலை) என இரு கட்டத் தேர்வுகளின்(Chennai IIT Entrance Exam Test) வாயிலாகத் தான் நடைபெறும். முதன்மைத் தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற்றவர்களில் முதல் 2 லட்சம் இடங்களைப் பிடிப்பவர்கள் உயர்நிலைத் தேர்வுகளுக்கு தகுதி பெறுவர். உயர்நிலைத் தேர்வுகளில் அதிக தரவரிசை பெற்றவர்களுக்கு ஐஐடிகளில் கலந்தாய்வு மூலம் பி.டெக் படிப்பில் சேர இடம் ஒதுக்கப்படும். இந்த முறையில் சேர்ந்தவர்கள் தான் ஐஐடி மாணவர்களாக கருதப்படுவர்.
ஐஐடி தனிப் படிப்பில் சேர்க்கை :
ஆனால், தமிழக அரசால் குறிப்பிடப்படும் 28 மாணவர்களும் பி.டெக் படிப்பில் சேரவில்லை. அவர்களில் 4 மாணவர்கள் மட்டும் தான் உயர்நிலைத் தேர்வுக்கு தகுதி பெற்றனர்; மீதமுள்ள 24 மாணவர்களும் அந்தத் தேர்வுக்குக் கூட தகுதி பெறவில்லை. இந்த 28 மாணவர்களில் 25 பேர் சென்னை ஐஐடியால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படும் பி.எஸ் (டேட்டா சயின்ஸ்) படிப்பிலும், மீதமுள்ள 3 மாணவர்கள் பி.எஸ் (எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்) படிப்பிலும் தான் சேர்ந்துள்ளனர். இவை ஐஐடி பட்டப்படிப்பு என்ற வரம்பிற்குள் வராது.
பொய் சொல்லி ஏமாற்றுவது நியாயமா? :
தனி நுழைவுத் தேர்வில் பட்டியலினத்தவர், மாற்றுத்திறனாளிகள் 30%, ஓபிசி பிரிவினர் 35%, பொதுப்பிரிவினர் 40% மதிப்பெண் எடுத்தாலே இந்தப் படிப்பில் எளிதாக சேர்ந்து விட முடியும்.12ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டும் தான் இந்தப் படிப்புக்கு தகுதி பெற முடியும் என்ற கட்டாயம் இல்லை. 11ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தாலே இப்படிப்புக்கான நுழைவுத்தேர்வை எழுதி தகுதி பெற முடியும். அவ்வாறு தகுதி பெற்றவர்கள் 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவுடன் பி.எஸ். படிப்புகளில் சேர்ந்து கொள்ள முடியும். இப்போதும் கூட தமிழக அரசால் குறிப்பிடப்படும் 28 மாணவர்களில் 14 பேர் 12ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் தான். அவர்கள் இப்போது தான் 11ம் வகுப்பை முடித்து 12ம் வகுப்புக்குச் சென்றுள்ளனர்.
கட்டுப்பாடுகள் அற்ற தேர்வு இது :
ஐஐடிகள் மூலம் வழங்கப்படும் பி.டெக் படிப்பில் சேர பல்வேறு நிபந்தனைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ள நிலையில், பி.எஸ் படிப்புக்கு அத்தகைய நிபந்தனைகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. உலகின் எந்த மூலையில் வாழ்பவர்களும், 17 முதல் 81 வயது வரையிலான அனைத்து வயதுப் பிரிவினரும் இந்தப் படிப்பில் சேர முடியும். இன்றைய நிலையில் சென்னை ஐஐடியில் மட்டும் பி.எஸ் படிப்பில் மொத்தம் 36 ஆயிரம் பேர் சேர்ந்து படித்து வருகின்றனர்.
பகுதிநேர படிப்புதான் ஏமாற்றாதீங்க :
அவர்களின் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேறு ஏதேனும் ஒரு படிப்பை, வேறு ஒரு கல்லூரியில் முழு நேரமாக படித்துக் கொண்டு, இந்தப் படிப்பை பகுதிநேரமாக பகுதி நேரமாக படித்து வருகின்றனர். 3000&க்கும் மேற்பட்டோர் பணி செய்து கொண்டே இந்தப் படிப்பை படித்து வருகின்றனர். இத்தகைய சாதாரணப் படிப்பில் சேர்ந்த மாணவர்களைத் தான் சென்னை ஐஐடியின் வழக்கமான படிப்புகளில் சேர்ந்து விட்டதைப் போன்று மாயத் தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயல்கிறது.
தேசியக் கல்விக் கொள்கை :
இதைவிடக் கொடுமை என்னவென்றால், பி.எஸ் (டேட்டா சயின்ஸ்), பி.எஸ் (எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம்) ஆகியவை புதிய தேசியக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் நடத்தப்படுபவை ஆகும். இப்படிப்பில் எப்போது வேண்டுமானாலும் சேரலாம்; எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம். அவர்கள் எத்தனை ஆண்டுகள் படித்தார்கள் என்பதைப் பொறுத்து சான்றிதழ்கள் வழங்கப்படும்.
மேலும் படிக்க : Anbumani : மு.க.ஸ்டாலின் மன்னிப்புக்கேட்க வேண்டும் : அன்புமணி
கல்விக் கொள்கை - திமுகவின் இரட்டை வேடம் :
இத்தகைய கல்வி முறை இடைநிற்றலை அதிகரிக்கச் செய்யும் என்று கூறி, புதிய கல்விக் கொள்கையை திமுக கடுமையாக எதிர்த்தது. இப்போது அதே கொள்கையின்படி நடத்தப்படும் படிப்பில் மாணவர்களை அரசே திணிக்கிறது. திமுகவின் இரட்டை வேடம் எப்படியிருக்கும் என்பதற்கு இது தான் மிகச்சிறந்த எடுத்துக் காட்டு ஆகும்.
மக்கள் பாடம் புகட்டுவார்கள் :
அரசு பள்ளி மாணவர்கள் சென்னை ஐஐடியில் சேர்ந்தனர் என்பது போன்ற பொய்யான தகவல்களை பரப்புவதை தமிழக அரசு நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டு மக்களை இத்தகைய செய்திகள் மூலம் ஏமாற்ற முடியாது. பொய்களை பரப்பும் திமுக அரசுக்கு வரும் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.” என்று அன்புமணி எச்சரித்து இருக்கிறார்.

