”கொந்தளிப்பில் மக்கள், திமுக ஆட்சிக்கு வராது" : அன்புமணி ஆவேசம்

Anbumani Ramadoss Criticized DMK Rule : மக்களின் கொந்தளிப்பு உச்சத்தை அடைந்துள்ளதால், திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது என்று, பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
PMK leader Anbumani stated that the DMK will not return to power because the people's anger has reached its peak
PMK leader Anbumani stated that the DMK will not return to power because the people's anger has reached its peakGoogle
2 min read

மக்கள் கொந்தளிப்பு

Anbumani Ramadoss Criticized DMK Rule : இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ தமிழ்நாட்டில் ஆட்சிக்கு எதிரான மக்களின் கொந்தளிப்பு உச்சத்தை அடைந்துள்ள நிலையில், எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் தத்தளித்துக் கொண்டிருக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஒவ்வொரு நாளும் ஒரு வெற்று அறிவிப்பை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்.

மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது

ஐந்தாண்டு கால ஆட்சியில் அனுபவித்தக் கொடுமைகளால் ஏற்பட்ட வெறுப்பில் திமுகவை மக்கள் தூக்கி வீசிவிட்ட நிலையில், என்ன தான் குட்டிக்கரணம் போட்டாலும் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பது தான் உண்மையாகும்.

தமிழகத்தில் 16 முறை ஆட்சி அமைப்பு

இந்திய விடுதலைக்குப் பிறகு 16 முறை ஆட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன; காமராசர், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர் உள்ளிட்ட 12 பேர் முதலமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் தற்போது நடப்பதை விட மோசமான ஆட்சி இருக்க முடியாது.

தமிழக மக்கள் கோபம்

மோசமான முதலமைச்சர் எவரும் இருக்க முடியாது என்று கூறும் அளவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி மீது தமிழ்நாட்டு மக்களுக்கு வெறுப்பும், கோபமும் ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டு மக்கள் அனுபவித்த துன்பங்கள், கொடுமைகள், ஏமாற்றங்கள், துரோகங்கள் ஆகியவை தான் இந்த வெறுப்புக்கும் கோபத்திற்கும் காரணம்.

சுதந்திரமாக நடமாட முடியவில்லை

உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படைத் தேவைகளை விட, அச்சமின்றி சுதந்திரமாக நடமாடும் உரிமை தான் மிகவும் அவசியமாகும். ஆனால், தமிழ்நாட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டுமின்றி ஆண்களும் கூட சுதந்திரமாக நடமாட முடியாது என்று கூறும் அளவுக்கு சட்டம் & ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.

குற்றப்பட்டியல் நீள்கிறது

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடங்கி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திம்மாவரம் இளம்பெண் படுகொலை என பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியல் திமுக ஆட்சியில் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கஞ்சா புழக்கம் அதிகரிப்பு

கஞ்சா போதையில் நடக்கும் குற்றங்கள் எல்லையில்லாமல் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. திருவள்ளூர் அருகே கஞ்சா போதையில் ஆபத்தான முறையில் இரு சக்கர ஊர்தியை ஓட்டிச் சென்றதற்காக அப்பாவி இளைஞர்கள் இருவரை ஒரு போதைக் கும்பல் தலையில் கல்லைப் போட்டு படுகொலை செய்துள்ளது.

திருத்தணியில் கஞ்சா போதையில் அரிவாள் வெட்டு, சென்னையில் போதையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் படுகொலை என பட்டியல் நீள்கிறது.

தமிழகத்தில் 7,500 கொலைகள்

திமுக ஆட்சிக்கு வந்ததற்கு பிந்தைய நான்கரை ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 7500 படுகொலைகள் நடந்துள்ளன. எங்கு திரும்பினாலும் கஞ்சா போதையில் திளைக்கும் மனித மிருகங்கள் எந்தக் கொடூரத்தை வேண்டுமானாலும் அரங்கேற்றும் என்ற அச்சம் நிலவும் நிலையில், அப்பாவி ஆண்களோ, பெண்களோ எவ்வாறு அச்சமின்றி பொதுவெளியில் சுந்தந்திரமாக நடமாட முடியும்?

பேச மறுக்கும் முதல்வர்

தமிழ்நாட்டில் இவ்வளவு கொடூரங்கள் நிகழும் நிலையில், இவ்வளவு அத்துமீறல்கள் அரங்கேற்றப்படும் நிலையில் இது குறித்து ஒரு வார்த்தைக் கூட பேச முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுக்கிறார்.

மாறாக ஜால்ரா சத்தம் மட்டுமே கேட்கும் சூழலை திட்டமிட்டு, கட்டமைத்துக் கொண்டு, மக்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்ற பொய்யையே மீண்டும், மீண்டும் கூறிக் கொண்டு காலத்தைக் கடத்திக் கொண்டுள்ளார்.

500 வாக்குறுதிகள் - 13% மட்டுமே நிறைவேற்றம்

2021&ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு அளித்த 505 வாக்குறுதிகளில் 13 விழுக்காட்டை மட்டுமே நிறைவேற்றியுள்ள திமுக அரசு, 87% வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. நிதிநிலை அறிக்கைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளில் 50 விழுக்காட்டை இன்னும் நிறைவேற்றவில்லை.

தொழில் முதலீடுகள் பெரிய அளவில் இல்லை

தொழில் முதலீடுகள் தொடர்பாக செய்து கொள்ளப்பட்ட ரூ.12.16லட்சம் கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 91.80% இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இப்படியாக எந்த வகையில் பார்த்தாலும் திமுக அரசின் செயல்பாட்டு அறிக்கையின் ஒவ்வொரு பக்கத்திலும் தோல்விகள், தோல்விகள், தோல்விகள் தான் நிறைந்திருக்கிறன.

விளம்பரம் மூலம் முறைக்க முயற்சி

இந்தத் தோல்விகளையெல்லாம் வெற்று விளம்பரங்கள் மூலம் மறைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் தான் தினமும் ஒரு திட்டத்தை அறிவித்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அந்தத் திட்டங்களுக்காக ஒரே ஒரு பைசா கூட நிதி ஒதுக்கப்படவில்லை.

செய்யாத சாதனைகளுக்கு விளம்பரம்

செய்யாத சாதனைகளை மக்கள் மனதில் பதியச் செய்வதற்காக மக்களின் வரிப்பணத்தில் ஊடகங்களுக்கு விளம்பரங்களை வாரி இறைக்கிறார்.

ஓர் ஆங்கில நாளிதழுக்கு ஒரே நாளில் மட்டும் பல கோடி ரூபாய் மதிப்பில் 22 பக்கங்களுக்கு திமுக அரசு விளம்பரங்களை வழங்கியுள்ளது.

திமுக அரசு ஓட்டைக் கப்பல்

திமுக அரசு என்பது மக்களின் கோபம், கொந்தளிப்பு என்ற பெருங்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஓட்டைக் கப்பல். அதை கிழிந்த காகிதங்களைக் கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஒட்டவைக்கப் பார்க்கிறார். தேர்தலில் திமுக ஆட்சியை மக்கள் தூக்கி எறியப் போவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று அன்புமணி குறிப்பிட்டுள்ளார்.

=============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in