
பாமகவில் தந்தை - மகன் உரசல் :
Ramadoss vs Anbumani Issue : பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை - மகன் இதுவரை எந்தக் கட்சியிலும் பார்க்காத அளவு வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. யார் தலைவர், யார் நியமிப்பது, யார் நீக்குவது? என கட்சியின் ஒவ்வொரு விஷயத்திலும் இருவரும் மோதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். கட்சி நிர்வாகிகள் எடுத்த சமரச முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிய, தொண்டர்கள் உச்சக்கட்ட விரக்தியில் இருக்கிறார்கள்.
தைலாபுரத்தில் ஒட்டுக் கேட்கும் கருவி :
இதனிடையே, தைலாபுரம் வீட்டில்(Thailapuram Thottam) தனது அறையில் ஒட்டுக் கேட்கும் கருவி வைக்கப்பட்டு, தான் பிறருடன் பேசுவதே யாரோ கேட்டு வருவதாக புகார் அளித்த ராமதாஸ், காவல்துறை விசாரணையும் கோரினார். வெளிநாட்டில் இருந்து இந்த கருவியை வரவழைத்து, ராமதாஸ் அறையில் வைத்தது யார் என்ற கேள்வியும் எழுந்தது.
தந்தையை வேவு பார்த்த மகன் :
இந்தநிலையில், தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு ராமதாஸ் பரபரப்பு பேட்டியளித்தார். ” 17ம் தேதி பொதுக்குழு அறிவித்து இருக்கிறேன். அதனால் வேறு எவரும் பாமக பெயரில் பொதுக்குழு கூட்டுகிறேன் என்று சொல்வது சட்டங்களுக்கும், கட்சி விதிகளுக்கும் புறம்பானது. உலகத்தில் தந்தையையே வேவு, உளவு பார்த்த பிள்ளை இருக்கிறதா என்றால் இருக்குது. அந்த மாதிரி என்னை வேவு பார்த்து இருக்கிறார்கள்.
விசாரணை தீவிரமாக நடக்கிறது :
இது சம்பந்தமாக விழுப்புரம் காவல்துறையிடம் புகார் கொடுத்தேன். அதேபோல் சைபர் கிரைம், அந்த துறையிடமும் புகார் கொடுத்து இருக்கிறேன். அந்த ஒட்டு கேட்கும் கருவி எல்லாவற்றையும் காவல்துறையிடம் ஒப்படைத்து இருக்கிறோம். நானே சிறப்பு ஏஜென்சியை அமர்த்தி இருக்கிறேன். அவர்கள் இது எங்கே இருந்து இயக்கப்படுகிறது என்று ஆய்வு செய்து இருக்கிறார்கள்.
மேலும் படிக்க : எனது வீட்டில் ஒட்டு கேட்கும் கருவி : பகீர் கிளப்பும் ராமதாஸ்
கட்சியின் தலைவர் நான்தான் :
கட்சியின் நிறுவனர், தலைவர் நான் தான். என்னை கட்சியினர் சந்திக்க கூடாது என்று சொல்வதற்கு எந்த அதிகாரமும் கிடையாது. கங்கைகொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி, தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக்கூடாது என்று கூறினார்” இவ்வாறு ராமதாஸ் பேட்டியளித்தார்.
=====