
முடிவுக்கு வராத தந்தை, மகன் மோதல் :
பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வருவதாக இல்லை. இருவரும் மல்லுக்கட்டி நிற்க நிர்வாகிகளும், தொண்டர்களும் என்ன செய்வது எனத் தெரியாமல் அலைகழிக்கப்படுகிறார்கள். நீக்கம், நியமனத்தில் தொடங்கி, தனித்தனியாக பொதுக்குழு வரை வந்திருக்கிறது இந்த மோதல்.
தனித்தனியாக பொதுக்குழு :
கடந்த 9ம் தேதி அன்புமணி தலைமையில் மாமல்லபுரத்தில் தனியாக பொதுக்குழு கூட்டம்(PMK General Body Meeting) நடைபெற்று, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவித்த ராமதாஸ் 17ம் தேதி தனது தலைமையில் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவித்து இருந்தார். அன்புமணி நடத்திய பொதுக்குழு விரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கும் ராமதாஸ் கடிதம் அனுப்பி இருந்தார்.
தைலாபுரத்தில் அன்புமணி :
இந்தநிலையில், நேற்றிரவு தைலாபுரம் தோட்டத்திற்கு அன்புமணி தனது குடும்பத்தாருடன் வந்து இருந்தார். இதனால், பாமகவில் பரபரப்பு நிலவியது. தனது தாயாரின் பிறந்தநாள் விழாவில் அன்புமணி கலந்து கொண்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகின.
இதனால், ராமதாஸ் - அன்புமணி இடையே சமாதானம் ஏற்பட்டு விட்டதாகவும், ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு நடைபெறாது என்றும் தகவல்கள் வெளியாகின. இருவரும் சமாதானம் ஆகி விட்டதால், இனி பிரச்சினைக்கு இடமில்லை என்றும் கூறப்பட்டது.
எந்த சமாதானம் இல்லை :
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். “ தாயாரின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளவே, அன்புமணி தைலாபுரம் வந்தார். நாங்கள் இருவரும் பேசிக் கொள்ளவில்லை. அவர் எனக்கு வணக்கம் தெரிவித்தார். நான் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தேன்.
திட்டமிட்டபடி பொதுக்குழு :
சமாதானம் ஆகி விட்டதாக கூறப்படுவது ‘பொய், பொய், பொய்’. திட்டமிட்டபடி நாளை எனது தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். அது என்ன என்பதை பொறுத்திருந்து பாருங்க” இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.
==================