

இடைநிலை ஆசிரியர்கள்
Secondary School Teacher Arrest for Protest : 2009 மே 31 தேதியில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும், அதே ஆண்டு ஜூன் 1ஆம் தேதி பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களுக்கும் இடையே ஊதிய முரண்பாடுகள் உள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கும் சுமார் 20,000 இடைநிலை ஆசிரியர்கள், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி கடந்த நான்கு நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொடுத்த வாக்குறுதி - கண்டுகொள்ளாத திமுக
2021 சட்டமன்ற தேர்தலின் போது இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்து இருந்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் கடந்து விட்டாலும், எந்த முன்னேற்றமும் இல்லை.
நான்கு நாட்களாக போராட்டம்
எனவே, கோரிக்கைகளை முன்வத்து கடந்த வாரம் அதாவது, முதல் நாள் பள்ளிக்கல்வித்துறை வளாகம் முன்பும், இரண்டாவது நாள் எழும்பூரில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பும், மூன்றாவது நாள் சென்னை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நுழைவாயிலில் அமர்ந்தும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மெரினா சாலையில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், இன்றுநான்காவது நாளாக மெரினா காமராஜர் சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே இடைநிலை ஆசிரியர்கள் பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாருடன் தள்ளுமுள்ளு
அவர்களை அப்புறப்படுத்த முயற்சித்த போது இடைநிலை ஆசிரியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அரசுக்கு எதிராகவும் போலீசாருக்கு எதிராகவும் ஆசிரியர்கள் கோஷம் எழுப்பினர்.
மயங்கி விழுந்த ஆசிரியை
போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியை ஒருவர் மயக்கமடைந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
16 ஆண்டுகளாக போராடுகிறோம்
இந்தப் போராட்டம் குறித்து இடைநிலை ஆசிரியர்கள் கூறுகையில், ‘ 16 ஆண்டுகளாக போராடிக் கொண்டிருக்கிறோம். அரையாண்டு விடுமுறையில் குழந்தைகளை விட்டுவிட்டு வந்து போராடுகிறோம்.
இத்தனை வருடங்களாக அமைதியாக தான் போராடினோம். நடுரோட்டில் அமர்ந்து போராடவில்லையே. எங்களை இங்கு அமர வைத்தது யார்… நீங்கள்தானே. எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும். இல்லையெனில் எங்களது போராட்டம் தொடரும்’ என்று இடைநிலை ஆசிரியர்கள் கூறினர்.
காமராஜர் சாலை - போக்குவரத்து பாதிப்பு
இடைநிலை ஆசிரியர்கள் மெரினா கடற்கரை சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. தலைமை செயலகம் செல்லும் வழியில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
================