

விஜய் வழியில் காங்கிரஸ்
Praveen Chakraborty has responded to Chief Minister Stalin by saying that the people of Tamil Nadu have no problem with the coalition government : விக்கிரவாண்டி மாநாட்டில் தவெக தலைவர் விஜய், தங்களுடன் கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்பிறகு விஜயின் வார்த்தைகளை காங்கிரஸ் கட்சி கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது.
திமுகவை நெருக்கும் காங்கிரஸ்
ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று, திமுகவுக்கு காங்கிரஸ் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. கூடுதல் தொகுதிகள் என்ற டிமாண்டும், திமுக கூட்டணி கட்சிகள் இடையே வேகமாக ஒலிக்க தொடங்கி விட்டது. இது திமுக தலைவர்களுக்கு குடைச்சலை தந்து வருகிறது.
ஆட்சியில் பங்கு - காங்கிரஸ் ஆசை
காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் எம்பி உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக பேசி வருகின்றனர். இதற்கு பதிலடி தர முடியாமல், திமுக திணறி வருகிறது.
ஆட்சியில் பங்கு ஒத்து வராது
இந்த நிலையில் இந்தியா டுடே தொலைக்காட்சியின் கருத்தரங்கு நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “ தமிழ்நாட்டிற்கு ஆட்சியில் பங்கு என்பது ஒத்து வராது. அவர்களுக்கும் இது தெரியும். திமுக - காங்கிரஸ் கட்சிக்கு இடையிலான கூட்டணியில் சிலர் குழப்பம் ஏற்படுத்த திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
அரசியலைத் தாண்டி ராகுல் காந்தி என்னுடைய சகோதரர் போன்றவர். ஆட்சியில் பங்கு என்ற பேச்சே தற்போது எழவில்லை என்று தெரிவித்திருந்தார்.
மாணிக்கம் தாகூர் கேள்வி
இதற்கு உடனே பதிலடி கொடுத்த மாணிக்கம் தாகூர், ”தமிழகத்தில் கூட்டணி ஆட்சியா? தனிக்கட்சி ஆட்சியா என்ற முடிவு மக்கள் கையில் இருக்கிறது. 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி அமைக்க தேவையான இடங்களை பெறாத போது, காங்கிரஸ் ஆதரவு அளித்து, 5 ஆண்டுகள் ஆட்சியை நடத்த உதவியது. 2006ல் மக்கள் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் போனது நமது தவறு” என்று ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.
பிரவீன் சக்ரவர்த்தி பதிலடி
விஜயை நேரில் சந்தித்து காங்கிரஸ் தவெக பக்கம் போகுமா? என்ற கேள்வியை தொடங்கி வைத்த பிரவீன் சக்ரவர்த்தியும், முதல்வர் ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார். ”தமிழக மக்களுக்கு கூட்டணி ஆட்சியில் பிரச்னை இல்லை என்று பதிவிட்டுள்ளார்.
அதிகாரத்தை பகிர தயக்கம் ஏன்?
பிற மாநிலங்களில் அதிகாரத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொள்ளும் போது தமிழகம் தயங்குவது ஏன் என்றும் பிரவீன் சக்ரவர்த்தி கேள்வி எழுப்பி இருக்கிறார். ராகுல் காந்தியின் வலதுகரமாக கருதப்படும் பிரவீன் சக்ரவர்த்தியின் இந்தப் பதில், முதல்வர் ஸ்டாலினுக்கு காங்கிரஸ் மேலிடம் மறைமுக பதிலாக அமைந்துள்ளது.
இதனால் திமுகவை மேலும் நெருக்க காங்கிரஸ் முடிவு எடுத்து செயல்படுவதாகவே தெரிகிறது. ஆட்சி பங்கு என்ற விவகாரத்தை ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியினர் ஏற்கனவே கொண்டு சென்றுவிட்ட நிலையில், அவர் பொறுமை காப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது.
===================