

யார் இந்த பிரவீன் சக்ரவர்த்தி
சில ஆண்டுகளாக தமிழக அரசியல் வட்டாரத்தில் அடிக்கடி உச்சரிக்கப்படும் பெயர் தான் பிரவீன் சக்ரவர்த்தி. தவெகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி வைக்க வேண்டும் என பிள்ளையார் சுழி போட்டு, அதற்கான பணிகளை தொடங்கிய சூத்ரதாரி.
அதிகாரத்தில் காங்கிரஸ் கட்சி
2026 தேர்தலுக்கு முன்பு இதை நிறைவேற்ற பெருமுயற்சி மேற்கொண்டார் பிரவீன் சக்ரவர்த்தி. ஆனால், தேர்தலுக்கு பிறகுதான் அது சாத்தியமானது. ஆட்சி, அதிகாரத்தில் பங்கு என்ற ஆசையை தமிழக காங்கிரஸ் தலைவர்களால் கூட அரை நூற்றாண்டுகளாக நிறைவேற்ற முடியாத நிலையில், அதை நடத்தி காட்டியிருக்கிறார்.
எம்பி பதவி பரிசு
அதற்கு பரிசாகத்தான் ராஜ்யசபா எம்பி பதவியை காங்கிரஸ் வழங்கி இருக்கிறது. அதற்கு தவெகவின் முழு ஆதரவும் கிடைத்துள்ளது.
திமுகவை எதிர்த்தவர்
சில மாதங்களாக திமுக மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வந்த பிரவீன் சக்கரவர்த்தி, தவெக தலைவர் விஜயை புகழ்ந்து பாராட்டி வந்தார். தேர்தலுக்குப் பின்னர் தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைய இவரது முயற்சியே காரணம்.
முதல்வர் விஜயின் நண்பர்
இதனால்தான் பதவியேற்பு நிகழ்விலேயே பிரவீன் சக்கரவர்த்தியை ‘நண்பர்’ என அழைத்தார் முதல்வர் விஜய். இப்போது தன் நண்பருக்காக ராஜ்ய சபா இடத்தையும் விட்டுக் கொடுத்திருக்கிறார் அவர்.
தமிழரான பிரவீன் சக்ரவர்த்தி
சென்னையை பூர்விகமாக கொண்ட பிரவீன் சக்கரவர்த்தி, பொருளாதார வல்லுநராகவும், தரவு மேலாண்மை ஆய்வாளராகவும் அறியப்படுபவர்.
பிட்ஸ் பிலானியில் பொறியியல் கல்வியும், அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் வார்டன் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்ற பிரவீன் சக்கரவர்த்தி, ஐபிஎம், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட நிறுவனங்களிலும் பணியாற்றி உள்ளார்.
மன்மோகன் சிங் குழுவில் பணி
2009-ம் ஆண்டு முதல் மன்மோகன் சிங் அரசாங்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த பல்வேறு குழுக்களில் பிரவீன் பணியாற்றியுள்ளார். 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களில் பல்வேறு கட்டுரைகளையும் அவர் எழுதியுள்ளார்.
காங்கிரசில் பிரவீன் சக்ரவர்த்தி
அதன்பின்னர் ராகுல் காந்தியின் அழைப்பின் பேரில் முழு நேர அரசியல்வாதியாக பிரவீன் சக்கரவர்த்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியில் இணைந்த பின்னர் பல்வேறு குழுக்களில் இடம்பெற்ற பிரவீன் சக்கரவர்த்தி, 2019 தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவில் முக்கிய பணியாற்றியவர்.
ராகுலின் நம்பிக்கைக்கு உரியவர்
அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியடைந்த போதும், பிரவீன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கை குறையவில்லை. இதன் காரணமாக காங்கிரஸ் கட்சியின் நிபுணர்கள் மற்றும் தரவு பகுப்பாய்வு பிரிவின் தலைவராக பிரவீன் சக்கரவர்த்தியை நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பு இந்தப் பதவியை வகித்தவர் சசி தரூர்.
ராகுல் காந்தியின் நெருக்கமான நட்பு வட்டாரத்தில் பிரவீன் இருக்கிறார். இதனால் அவரின் கருத்து எப்போதும் உற்று கவனிக்கப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் மீண்டும் காங்கிரசை வலுப்படுத்தும் நோக்கத்தோடு, அதில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்தார் சக்கரவர்த்தி. கடந்த மக்களவைத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் போட்டியிட முயற்சி செய்தார்.
காங்கிரஸ் மேலிடம் முழு சம்மதம் தெரிவித்தாலும், திமுக தலைமை ஒப்புக்கொள்ளாததால் அவர் போட்டியிட முடியாமல் போனதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் மீது தனிப்பாசம்
விஜய் தவெகவை தொடங்கிய பின்னர் திமுக கூட்டணிக்கு எதிராக தமிழக காங்கிரஸில் அவ்வப்போது சலசலப்பு குரல்கள் எழ ஆரம்பித்தன. திமுக, பாஜக, அதிமுகவை ரவுண்டு கட்டி விளாசிய விஜய் எங்கேயும் காங்கிரஸை விமர்சித்ததில்லை.
நட்புக்கு பாலம்
விஜய் - ராகுல் காந்தி இடையே நட்பு பாலமாக பிரவீன் முக்கிய காரணமாக இருந்தார். 2026 சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்க, நெருங்க ‘ஆட்சியில் பங்கு’ என்ற கோஷத்தை வைத்து திமுகவுக்கு, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நெருக்கடி கொடுத்தனர்.
பிரவீன் சக்கரவர்த்தியோ ஒரு படி மேலே போய், ‘உ.பி.யை விட தமிழகம் தான் அதிகம் கடன் வாங்குகிறது’ என வெடியை கொளுத்திப் போட்டார்.
ஒருபக்கம் காங்கிரஸ் குழு திமுகவோடு பேச்சு நடத்த, மறுபக்கம் விஜய்யை சந்தித்து அதிர்வலைகளை உருவாக்கினார் பிரவீன். ராகுலின் ஆசியோடுதான் பிரவீன் இதை நடத்தியதாக சொல்லப்பட்டது.
காங்கிரசில் ஏற்பட்ட எதிர்ப்புக் குரல்கள் காரணமாக கூடுதல் தொகுதிகளையும், ராஜ்யசபா சீட்டையும் திமுக கொடுக்க வேண்டியதாயிற்று,
ஸ்டாலினை தவிர்த்த ராகுல்
கடைசி வரை திமுக தலைவர் ஸ்டாலினுடன் ஒரே மேடையில் ராகுல் காந்தி பிரச்சாரத்தில் பங்கேற்கவே இல்லை. இத்தனை களேபரங்களுக்கு பிறகு, திமுக ஆட்சியை இழக்க, தவெக ஆட்சி அமைக்கும் நிலை உருவானது.
தவேகவுக்கு கை கொடுத்த காங்கிரஸ்
108 இடங்களுடன் ஆட்சியமைக்க முடியாமல் தவெக தவித்தபோது, எந்தக் கேள்வியும் இல்லாமல் முதலில் கைகொடுத்தது காங்கிரஸ். அத்துடன், மக்களவை, உள்ளாட்சி தேர்தல்களிலும் தவெகவோடு தான் கூட்டணி என பலமான அஸ்திவாரம் அமைத்து இருக்கிறது காங்கிரஸ்.
60 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியில் பங்கு
காங்கிரஸ் வழியில் அடுத்தடுத்து இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் தவெகவுக்கு ஆதரவளிக்க வரிசை கட்டின.
வியூகதாரி பிரவீன் சக்ரவர்த்தி
60 ஆண்டு காலம் கழித்து தமிழக அமைச்சரவையிலும் இடம்பிடித்து முத்திரை பதித்துள்ளது காங்கிரஸ். கட்சியின் இந்த நகர்வுகளின் பின்னாலும் பிரவீன் சக்கரவர்த்தியின் வியூகங்கள் இருந்தாக சொல்லப்படுகிறது.
மிகச்சரியான நேரத்தில் தவெக - காங்கிரஸ் கூட்டணியை உருவாக்கி, தமிழகத்தில் மட்டுமின்றி, வருங்காலத்தில் தென் மாநில அரசியலிலும் காங்கிரஸ் வலுவாக காலூன்ற வழி வகுத்து கொடுத்து இருக்கிறார் பிரவீன் சக்ரவர்த்தி.
59 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவர்கள் செய்ய முடியாததை செய்து காட்டி அசத்தி இருக்கிறார். அதற்கான சரியான பரிசுதான் ராஜ்யசபா எம்பி சீட்.
=================================