

அதிமுக vs தேமுதிக
2024 மக்களவை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிட்டது. கடந்த ஆண்டு அதிமுகவுக்கு 2 ராஜ்யசபா சீட்கள் கிடைத்த நிலையில், தங்களுக்கு ஒன்றை தருவதாக தெரிவித்த எடப்பாடி, வாக்குறுதியை மீறி விட்டதாக பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டினார்.
ஆனால், எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகவில்லை, வாய்மொழி பேச்சு மட்டுமே நடைபெற்றதாக எடப்பாடி மறுப்பு தெரிவித்தார்.
திமுக கூட்டணியில் தேமுதிக
நடைபெற இருக்கிற சட்டமன்ற தேர்தலில், திமுக் கூட்டணியில் தேமுதிக, ராஜ்யசபா சீட்டை பெற்று, எல்.கே. சுதீஷை எம்பியாக்கி இருக்கிறது. 8 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. பரப்புரையில் தேமுதிக பற்றி கடுமையான விமர்சனங்கள் எடப்பாடி முன்வைத்து வருகிறார்.
எடப்பாடி மீது குற்றச்சாட்டு
இதற்கு பதிலளிக்கும் விதமாக திருவண்ணாமலையில் பேட்டியளித்த பிரேமலதா, ராஜ்யசபா சீட் தருவதாக எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டு வழங்கிய ஒப்பந்தத்தை செய்தியாளர்கள் முன்பு காண்பித்தார்.
நம்பிக்கை துரோகம்
நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார் எடப்பாடி பழனிசாமி. 2024ல் ராஜ்யசபா சீட் தருவதாக கூறி ஏமாற்றியவர் எடப்பாடி பழனிசாமி. கண்ணியத்தை கடைபிடிக்கவே எடப்பாடி கையெழுத்திட்ட ஒப்பந்தத்தை வெளியிடாமல் இருந்தேன்.
ஒப்பந்தத்தில் வருடத்தை குறிப்பிட கேட்டபோது, என் மீது நம்பிக்கை வையுங்கள் என்று பழனிசாமி கூறினார்.முதலமைச்சர் வேட்பாளராக இருந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமி இப்படி எல்லாம் பேசக்கூடாது.
தேமுதிகவை விமர்சிக்க கூடாது
மூன்றாம் தர பேச்சாளர் போல் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது. அவர் கையெழுத்து போட்ட ஒப்பந்தத்தை இதுவரை நான் வெளியே காட்டியதில்லை.
அண்ணாமலையார் உண்ணாமலையம்மன் கோயிலில் காண்பிக்கிறேன் என்று பிரேமலதா காண்பித்தார். அதில், 5 மக்களவை தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக கூறப்பட்டுள்ளது.
===